என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: இந்தி புரியவில்லை என ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பு அதிருப்தி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வரும் 15-ம் தேதி வேலை நிறுத்தத் தேதி அறிவிக்கவுள்ளதாக ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

என்எல்சியில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பிரதமர் அறிவித்த போஸ்கர் மேளா திட்டத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நோட்டீஸ் தந்திருந்தது. பணிநிரந்தரம் செய்யும் வரை ரூ.50,000 ஊதியம் தர வேண்டும் என வலியுறுத்தி வரும் 15-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதாக தெரிவித்திருந்தது.

வரும் 15-ம் தேதி வேலைநிறுத்தத்துக்கு செல்லக் கூடாது என்று என்எல்சி நிர்வாகமும், மத்திய தொழிலாளர் துறையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாக தரப்பில் துணை பொதுமேலாளர் திருக்குமரன், உதவி பொது மேலாளர் உமாமகேஸ்வரன், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். உதவி தொழிலாளர் கமிஷனர் ரமேஷ்குமார் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "சமரச அதிகாரி சட்டபூர்வமாக செயல்படவில்லை. அவருக்கு தமிழ் தெரியவில்லை. இந்தி எங்களுக்கு புரியவில்லை. தமிழ் பேசும் அதிகாரிதான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். முக்கியமான விஷயத்தில் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி பாதிக்கக்கூடிய நிலையில், இவ்விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. அதனால், நான்கு ஆட்சேபணைகளை தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். வரும் 15-ம் தேதி மாலை வேலை நிறுத்த தேதி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் எந்தத் தேதியில் இருந்து போராட்டம் தொடங்கும் என்று அறிவிப்போம்" என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE