அரசு மருத்துவர்களுக்கு பணிச் சுமையும் இல்லை; மன அழுத்தமும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு பணிச் சுமையால் மன அழுத்தம் சார்ந்த எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மருத்துவர்களின் பணிச் சுமை காரணமாக மன அழுத்தத்தினால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக வந்த செய்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் பதிலளிக்கும்போது, "மாரடைப்பைப் பொறுத்தவரை அனைத்து தரப்பினருக்கும், வயதினருக்கும் வந்து கொண்டிருக்கிறது. எனவே தேவையில்லாத பீதியைக் கிளப்ப வேண்டாம். இங்குள்ள மருத்துவர்களுக்கு பணிச் சுமையால் எந்தவித மன அழுத்தப் பிரச்சினையும் இல்லை. எனவே இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையை பத்திரிகையாளர்கள் உருவாக்குவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து மருத்துவர்களிடமே நேரடியாகவே பத்திரிகையாளர்கள் ஆய்வு நடத்தலாம்.

அதேபோல் இங்கு மருத்துவப் பணியிடங்கள் 100% காலியாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது தவறு. இங்குள்ள 1021 காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு எம்.ஆர்.பி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1021 இடங்களுக்கு தற்போது 24,000 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு வெளியிடப்பட்டுவிட்டது. இறுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் 4 இளம் மருத்துவர்கள் உயிரிழப்பு: பணியினால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் அரசு மருத்துவர்கள் தகவல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE