உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழரை பிரதமராக்குவதாக சொன்னது மகிழ்ச்சி - மேட்டூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

மேட்டூர்: தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழரை பிரதமராக்கப் போகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ரஃபேல் மற்றும் அதானி ஊழலால் இன்றைக்கு நாடு தலை குனிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்று பழனிசாமி கூறுகிறாரே என கேட்கிறீர்கள்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். ஓமந்தூரில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதா, பின்னர், கல்வெட்டில் பெயரை பொறித்து திறந்து வைத்தார்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், முதல்வராக இருந்த கலைஞர் திறந்து வைத்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சீரழித்தார்கள். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழரை பிரதமராக்கப் போகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை, முருகன் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.

மத்தியில் 9 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த சிறப்புத் திட்டமும் தமிழகத்துக்கு வரவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது, என்னென்ன சிறப்புத் திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தது என்பதை பட்டியல் போட்டு காண்பித்துள்ளேன். அவர் அதைப் படிக்கவில்லையா? அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என தெரியவில்லை.

தமிழகத்துக்கு மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலத்தில் ரூ.400 கோடியில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா ஆகியவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

ஜிஎஸ்டியில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுக்கிறது. தமிழகத்திலிருந்து அதிகமாக ஜிஎஸ்டி கொடுத்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு மத்திய அரசு குறைவாக நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதற்கு உறுதி கொடுத்து, அறிவித்தார். பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். தமிழகத்துக்கு பலமுறை அமித்ஷா வந்த போது, 50 மற்றும் 75 சதவீதம் பணி முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ரஃபேல் மற்றும் அதானி ஊழலால் இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. இதற்கு பாஜக பதில் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்