ஆடம்பர பொருட்கள் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டு 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 178 பட்டாசு ஆலைகள், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 152 பட்டாசு ஆலைகள், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனு மதி பெற்ற 437 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டதாலும், மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றத்தாலும், பட்டாசுக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிவிதிக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு வட மாநில ஆர்டர்கள் குறைந்தன. இதனால், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விட்டது.
பட்டாசு ஆலைகளுக்கு ஆபத்து
சீனாவிலிருந்து ஏராளமான கன்டெய்னர்களில் கள்ளத் தனமாக சீனப்பட்டாசுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகள் காரணமாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் மாரியப்பன் கூறியதா வது:
தீபாவளி பண்டிகையையொட்டியே பட்டாசுக்கான நுகர்வு எவ் வாறு உள்ளது என்பது தெரியவரும். ஜிஎஸ்டியால் விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் பட்டாசுகளை வாங்குவதில் மாற்றம் ஏதும் உள்ளதா என்பது இனிமேல்தான் தெரியவரும். பட்டாசு உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வது என்பது நுகர்வோர் கையில்தான் உள்ளது. இந்த முறை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டால், தீபாவளிக்குப் பிறகு பல பட்டாசு ஆலைகள் மூடப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்றார்.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் பட்டாசுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பட்டாசுகளை மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது 28 சதவீத ஜிஎஸ்டியை வசூலித்துக்கொள்கிறோம். ஆனால், ஜிஎஸ்டி பதிவு செய்யாத சில்லறை வியாபாரிகளுக்கு பட்டாசுகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளால் ஜிஎஸ்டியை வசூல் செய்ய முடிவதில்லை. அவ்வாறு வசூல் செய்யப்பட்டாலும், அந்த வரியையும் பட்டாசு விலையில் சேர்த்து பொதுமக்களிடம் விற்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக விலை உயர வாய்ப்பு உள்ளது.
அதோடு, வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதன் காரணமாக பட்டாசு ஆர்டர்கள் கொடுக்க வியாபாரிகள் தயங்கினர். அதனால், உற்பத்தி குறைந்துவிட்டது. தற்போது நீதிமன்ற தடை இல்லாததால் வட மாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளன. இருப்பினும், சிவகாசியில் உற்பத்தி குறைந்ததால் போதிய அளவில் பட்டாசுகளை அனுப்பிவைக்க முடியவில்லை.
வரியை குறைக்க வேண்டும்
பட்டாசுக்கு 28 சதவீத வரி விதிப்பால் எதிர்மறை விளைவுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளத்தனமான விற்பனை அதிகரிக்கும் நிலையுள்ளது. இதைத் தடுக்க, பட்டாசுக்கான 28 சதவீத வரியை 18 அல்லது 12 சதவீதமாக குறைக்க வேண்டும். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தால் பல கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். தரமான மற்றும் விலை குறைந்த பட்டாசு ரகங்களை தயாரிக்க முடியும். பட்டாசுத் தொழிலும் வளரும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago