மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி தான் மக்களிடம் வாக்கு கேட்க உள்ளோம் என முன்னாள் அமைச்சர், அதிமுக மாநில பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தாமரைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியற்றில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் தலா ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ., அதிமுக மாநில பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் நாகராணி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி தான் மக்களிடம் வாக்கு கேட்க உள்ளோம்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை முன்னுறுத்தி தான் பிரச்சாரம் செய்ய உள்ளார். பா.ஜ., கட்சியை பொருத்தவரை தமிழகத்தில் 25 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களது எண்ணம். அதிமுகவை பொருத்தவரை 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி கள்ளச்சாராயம் இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE