அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதற்கான நடைமுறை என்ன? - இபிஎஸ் தரப்பில் வாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: "ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார். அதே நடைமுறை தான் அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது" என்று இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆறாவது நாளாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அங்கீகரித்து அவைத் தலைவர் கையெழுத்திட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் பொதுக்குழுவின் அதிகாரத்தை பற்றி சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளர்தான் தேர்தலில் போட்டியிட்டார். 2023, மார்ச் 28ல் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருகிறார். அவரது கையெழுத்துடன் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளையும் நீக்கி வருகிறார். இந்த வழக்கில் முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் வேண்டாம் என தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படி பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளோம். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் தான் அதிகரிக்கும். எனவே, இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. எட்டு மாதங்களுக்கு பின், பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அடிமட்ட அளவில் இருந்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும் அதிமுகவில், பொதுக்குழு முடிவுகள் அனைத்தும் உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு 75 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்த நிலையில் மேலும் 55 பேர் உடனிருக்கின்றனர். ஆனால் பன்னீர்செல்வத்துக்கு 95 சதவீதத்தினர் எதிராக உள்ளனர். இதனால் அவரால் போட்டியிட முடியவில்லை.ஒருங்கிணைப்பாளர் மீது எவரும் நடவடிக்கை எடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் உள்ளது. அதிமுகவில் உறுப்பினர்களை நீக்கும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என விதி கூறுகிறது. ஆனால் இதுவரை அப்படி குற்றப்பத்திரிகை ஏதும் வழங்கப்படவில்லை.

மாறாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்படும். உடனடி நடவடிக்கைக்கு எந்த குற்றப்பத்திரிகையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்பதற்காக பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறமுடியாது. கட்சி விதிகளில் கூட உடனடி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலமாற்றத்துக்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளராக இருந்த போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார். அதே நடைமுறை தான் அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தலில் தகுதியானவர்கள் போட்டியிட வழிவகை செய்யவே, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அடிப்படை தொண்டர்களிடம் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை எனவே, பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சி விதிப்படியே ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்" என்று வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து பன்னீர்செல்வம் தரப்பு பதில் வாதத்துக்காக விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE