தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் இன்று விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் 6 மாதம் முதல் 6 வயது வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கி திட்டத்தை இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஆட்சியர் பழனி ஆகியோர் தலைமையில், எம் எல் ஏக்கள் விழுப்புரம் லட்சுமணன், விக்கிரவாண்டி புகழேந்தி, மயிலம் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியது, ''தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை காத்திடும் வகையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,11,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை உறுதி செய்திடும் வகையில் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட வேண்டும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தின் மூலம் குழந்தைகளுக்கு வயதிற்கேற்றவாறு வழங்கப்பட வேண்டிய உணவு முறைகள் குறித்து பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல் மருத்துவ பரிசோதனையின் போது 44,000 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு, பேச முடியாமல் இருத்தல், இயன்முறை பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

இவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சையுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான குழந்தைகள் தற்பொழுது மற்ற குழந்தைகளைப்போலவே நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து வருகின்றனர். சில குழந்தைகளுக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் தொடர்ந்து 56 நாட்கள் வழங்கப்பட வேண்டும்.

இரண்டு வயதுடைய குழந்தைகளுக்கு 60 கிராம் எடையுள்ள பிஸ்கட்டும், இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 கிராம் எடையுள்ள பிஸ்கட்டும் வழங்கிட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் உடல் எடை மற்றும் வளர்ச்சி ஏற்படும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் வழங்கி பாதுகாத்திட வேண்டும்'' என்றார்.

இதனை தொடர்ந்து பாணாம்பட்டில் இயங்கிவரும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களிடம் இல்லத்தில் தங்களுக்குண்டான வசதிகள் உணவுகள் மற்றும் மருத்துவ தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் முண்டியம்பாக்கத்திலுள்ள சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பிரபு, சமூக நல அலுவலர் ராஜாம்மாள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் .அன்பழகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சனி மூலையில் அரசுத் திட்டம் தொடங்கியதற்கு விமர்சனம்: விழுப்புரம் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் சனிமூலை எனப்படும் வடகிழக்கு திசையில்தான் செண்டிமெண்டாக துவக்குவார்கள். பகுத்தறிவை வளர்க்கும் கட்சியான திமுக தலைமையிலான அரசும் இந்த திட்டத்தை அதே பாணியில் சனி மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் துவக்கி வைத்ததை எதிர்கட்சிகள் கிண்டலடித்து விமர்சிக்க துவங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE