பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கு: ஜூன் 16-ல் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான புகார் வழக்கில் இம்மாதம் 16-ம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி , அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 138 முறை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதுவரை தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நடுவர் விசாரணை நடத்தியுள்ளத்தோடு, அந்த சாட்சியங்களிடம் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் தரப்பினர் தங்களது இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக தனித்தனியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்த நடுவர் புஷ்பராணி, வரும் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அன்று குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டும், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கக் கூடிய இந்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்று வரும் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் இவ்வழக்கு பெரும் எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE