அதிமுக கூட்டணிதான் தமிழகத்தில் பாஜகவின் அடையாளம்: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி

By செய்திப்பிரிவு

சென்னை: "சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களுக்குப் பிறகு, பாஜக 4 இடங்களில் இருப்பதற்கு யார் காரணம்?அதிமுகதானே காரணம். அதையும் மறுப்பாரா அண்ணாமலை? தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பாஜகவுக்கு ஓர் அடையாளம் இருக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் வகையில்தான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கிறது. அவருடைய எண்ணம் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறக் கூடாது, பிரதமராக நரேந்திர மோடி வரக் கூடாது என்பதை போலத்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது.

கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியை விமர்சிப்பது என்பதை ஏற்றக்கொள்ள முடியாத செயல். அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகாவுக்குச் சென்றார். அங்கு என்ன பாஜக வென்றதா? இவர் போன ராசி, அம்போவாகிவிட்டது கர்நாடகாவில். கிட்டத்தட்ட 40 சதவீத கமிஷன், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அசோசியேசனே வாக்களிக்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை எந்தவொரு அரசுமே 40 சதவீத கமிஷன் வாங்கியது இல்லை. பாஜக அரசாங்கம் 40 சதவீதம் வாங்கியது. ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை அதைப் பற்றி பேசியிருக்கலாமே?

இவர் தேர்தல் பொறுப்பாளராக சென்ற மாநிலம் கர்நாடகா, அந்த மாநிலத்தில் ஒரு ஒப்பந்ததாரா் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார். எனவே, அந்த அரசாங்கத்தின் 40 சதவீத ஊழலைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஒரு மறைந்த தலைவரைப் பற்றி பேசுவது வன்மையான கண்டிக்கத்தக்கது.

சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களுக்குப் பிறகு, பாஜக 4 இடங்களில் இருப்பதற்கு யார் காரணம்? அதிமுகதானே காரணம். அதையும் மறுப்பாரா அண்ணாமலை? தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பாஜகவுக்கு ஓர் அடையாளம் இருக்கும். எனவே, அந்த வகையில், ஓர் அடிப்படையான விசயத்தைக் கூட மறந்து, ஒரு கூட்டணியை முறிக்கின்ற செயலாக அண்ணாமலை ஈடுபடுவதை, அமித் ஷாவும், நட்டாவும் கண்டிக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. இல்லை என்றால், கூட்டணி குறித்து வந்து.... நான் சொல்ல தேவையில்லை. உரிய நேரத்தில் எங்களது கட்சி முடிவு செய்யும்.

அதிமுகைவை விமர்சிக்கும் அண்ணாமலையின் பேச்சும், போக்கும் தொடர்ந்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். அகில இந்திய தலைமையில் இருக்கும் பாஜக தலைவர்கள் உடனான அதிமுக நட்பு நன்றாகவே உள்ளது. ஆனால், தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போதுமான அனுபவம் இல்லாமல், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் கருத்துகளைக் கூறும் சூழ்நிலைகள் வரும்போது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கடமையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் குறித்தும், முன்னாள் முதல்வரே ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்தான் என்றும், இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றும் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE