சென்னை உயர் நீதிமன்றத்தில் கழிப்பறை இல்லாததால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றம் தவிர்த்து, சென்னை பெருநகர உரிமையியல் அமர்வு நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், போதை பொருள் தடுப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் என 100-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நீதிமன்றங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகள் இல்லை. தெற்குப்பகுதியில் உள்ள ஒரே ஒரு கட்டண கழிப்பறையும் இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்துக்கு வரும் பெண்கள் குறிப்பாக வயதானவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க ஒவ்வொரு அலுவலகமாக கழிப்பறைகளைத் தேடிச் செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

கேண்டீன் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் தனிப்பட்ட உபயோகத்துக்கு இருப்பதால் அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வரும் பெண்கள், வேறு எங்கு கழிப்பிடங்கள் உள்ளது என்பதை கேட்கக்கூட முடியாமல் தர்மசங்கடத்துக்கு ஆளாகின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நுழைவு வாயில் பகுதியில் தனியாக கட்டண கழிப்பறை கட்டிக்கொடுத்தால் உயர் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் இந்த இக்கட்டான இன்னலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE