ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில், 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை, ரூ 710 கோடியில் மேற்கொள்ள கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு பிரிவு விவசாயிகளும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என ஒரு பிரிவு விவசாயிகளும் போராடி வருகின்றனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் உண்ணாவிரதம்: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் விவசாயிகள், கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 30-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் காலை முதல் மாலை வரை அமர்ந்து போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர்.
தொடர் உண்ணாவிரதத்தில் 6-வது நாளாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று வாயில் கருப்புத்துணி கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். உண்ணாவிரதம் நடக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
» தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் கட்சிகள் ஆதரவு: கீழ்பவானி விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக, கொமதேக, நாம் தமிழர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜ், பாஜக எம்.எல்.ஏ.சரஸ்வதி, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், கொமதேக மாநில நிர்வாகிகள் சூரியமூர்த்தி, பாலு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வணிகர்கள் கடையடைப்பு: கீழ்பவானி விவசாயிகள் போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஈரோடு அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பில் பங்கேற்றுள்ளனர். சென்னிமலை, காஞ்சிகோயில், திங்களூர், நசியனூர், வெள்ளோடு, ஈங்கூர், பெருந்துறை பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னிமலை நான்காயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கவில்லை.
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடத்தி வரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு ஆகியோர் கூறியதாவது:
கீழ் பவானி பாசன கால்வாய், குடிநீர், விவசாயம், மரங்கள், சுற்றுசூழல் காக்கும் மண் கால்வாய் ஆகும். இந்த கால்வாய்யை சார்ந்த 180 க்கு மேற்பட்ட ஊராட்சி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு என்ற பெயரில், கான்கிரீட் போடுவதன் மூலம் நீர் மேலாண்மையை கெடுக்க முயற்சி நடக்கிறது. 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்.
கடந்த 65 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள மண்கால்வாயை, மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய கட்டுமானங்களில் பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ள நாங்கள் தடை செய்யவில்லை. ஆனால், வாய்க்கால் மற்றும் கிளைகளில் கான்கிரீட் செய்வதை எதிர்க்கிறோம்.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் விவசாயிகளுக்கு அளித்த உறுதியை மீறி, சில இடங்களில் கிளை வாய்க்கால்களும், மண் கரைகளும் கான்கிரீட் போடப்படுகிறது. இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்.
முதல்வர் வாக்குறுதி: தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்கள் கருத்தை கேட்ட பிறகே பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், தற்போது அதனை மீறி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு தேவையற்ற சிக்கல் ஏற்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு, தனித்தனியாக மனு அளித்துள்ளோம். கீழ்பவானி சீரமைப்பிற்கென கடந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து செய்வதே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். அதன்பிறகு, விவசாயிகளிடம் கருத்துக்களைப் பெற்று வாய்க்காலில் பலவீனமாக உள்ள பணிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago