அதிதீவிர புயலாக வலுப்பெற்ற `பிப்பர்ஜாய்': ஜூன் 15-ல் குஜராத்-பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: அரபிக் கடலில் நிலவிய 'பிப்பர்ஜாய்' அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் மாண்டிவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்' வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வரும் 14-ம் தேதி வடக்கு திசையிலும், பின்னர் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சவுராஷ்டிரா- ட்ச்வளைகுடா மற்றும் அதையொட்டிய பாகிஸ்தான் கடற்கரைப் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காலை 11.30 முதல், பிற்பகல் 2.30 மணியளவில் மிக தீவிரப் புயலாக மாறி, குஜராத் மாநிலம் மாண்டிவி, பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளைக் கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 135 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ. வேகத்திலும் இருக்கக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் தென்மேற்குப் பருவமழை பரவியுள்ளது. மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களிலும், 16-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரிஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 5 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், ஆகிய இடங்களில் தலா 3செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 14-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE