குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைத் தொழிலாளர் முறையைமுற்றிலும் அகற்ற, தமிழக அரசுக்கு நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் கிடைத்த அரிய பருவமே குழந்தைப் பருவம். திருவள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார்.

குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் இருக்க வேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளில் இருந்துப்பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றமாகும்.

குழந்தைகள் பள்ளிகளுக்குப் படிப்பதற்கு மட்டும் செல்வதில்லை. சக குழந்தைகளுடன் பூக்களை ரசிக்கவும், புன்னகைகளைப் படரவிடவும் செல்கின்றனர். கற்றுக்கொள்ள மட்டுமல்ல, உற்றுநோக்கவும் பள்ளிகளே அவர்களுக்கு நாற்றங்கால்களாக இருக்கின்றன.

வாழ்நாள் பரிசு: குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் குழந்தைத் தனத்தைத் திருடி, துடிப்புமிக்க அவர்கள் பார்வையைமங்கியதாக மாற்றி, துள்ளுகின்ற அவர்களைத் துவள்கிறவர்களாக்கி, பாடத்தை ஏந்த வேண்டிய அவர்கள் கைகளில், பணிக் கருவிகளைத் தாங்கும் சூழ்நிலையை உருவாக்கி, அவர்கள் சிறகுகளைக் கத்தரித்து, பணியிடம் என்ற சிறையில் அடைப்பது மிகப் பெரிய கொடுமையாகும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவதுதான். அவர்களுக்கு அளிக்கப்படுகிற மிகப் பெரிய விடுதலை மட்டுமல்ல, வாழ்நாள் பரிசாகும்.

தமிழ்நாடு அரசு அதை தன் தலையாயக் கடமையாகக் கருதி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாபெரும் இயக்கமாக இது ஓங்கி வளர்ந்திருப்பதால், குழந்தைத் தொழிலாளர் முறையைஅகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

குழந்தைகள் செம்மையாகப் படிக்க, கட்டணமில்லாக் கல்வி, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், அவற்றை வைக்க புத்தகப்பை, சீருடை, பசியின்றிப் படிக்க காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, வசதியாய் நடக்கக் காலணி, அசதியின்றிப் பயணிக்கப் பேருந்து அட்டை, மிதிவண்டி என பல்வேறு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. படிப்பை சுமையாக இல்லாமல், சுகமாக மாற்றவே இத்தனை நலத் திட்டங்கள்.

தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்காக திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று விரும்புகிறோம். அரசு சாரா நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE