கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்க அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை கடந்த ஜூன் 7-ம் தேதி திறக்க கல்வித் துறை திட்டமிட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 14-ம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புத்தகங்கள், சீருடை: முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை போன்ற நலத் திட்ட பொருட்களையும் முதல் நாளிலேயே விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் இன்றுகாலை 11 மணி அளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

அதுகுறித்து மாணவர்கள்,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுஉட்பட பள்ளிகளின் தலைமைஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி தாமதமாக திறக்கப்படுவதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE