தமிழரை நாட்டின் பிரதமர் ஆக்குவோம் - சென்னை கூட்டத்தில் அமித் ஷா உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை/ வேலூர்: தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பின்னர், கிண்டியில் உள்ளநட்சத்திர விடுதிக்கு சென்றார்.

அவரை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, அப்போலோ மருத்துவமனைகள் குழும செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட 24 முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர்.

தொடர்ந்து, நேற்று காலையில் அமித் ஷாவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, சட்டம் - ஒழுங்குநிலை, கள நிலவரம், அரசின் செயல்பாடுகள் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: சென்னை விமான நிலையத்தைவிட்டு நான் வெளியேறியபோது மின் தடை ஏற்பட்டது. இந்த இருளை கண்டு அச்சப்பட தேவையில்லை. தமிழகம் இருளில் இருப்பதை இந்த மின் தடை காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக வெளிச்சத்தை கொடுக்கும். வர உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து 2 பேருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை.

பாஜகவை தமிழுக்கு எதிரான கட்சியாக திமுக திட்டமிட்டு கட்டமைக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிமைப்பணிகள் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுத முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை தமிழில் எழுத முடியும் என்ற நிலையை பாஜக கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் 550-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், வேலூர் சென்ற அமித் ஷா, அங்கு நடந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசியபோது, ‘‘மத்தியில் காங்கிரஸ் - திமுக ஆட்சியில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி நடந்துள்ளது. தமிழகத்தில் பல தலைமுறையாக நடக்கும் ஊழலை தூக்கி எறிந்து, ஊழலற்ற தமிழரின் ஆட்சியை அமைக்க நேரம் வந்துவிட்டது’’ என்றார்.

இக்கூட்டத்தில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

9 ஆண்டு கால சாதனையை பட்டியலிட்ட அமித் ஷா: வேலூர் மாவட்டம் கந்தனேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ‘மோடி ஆட்சியில் 9 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். 2004-14 வரை உங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. 9 ஆண்டு மோடி ஆட்சியில் ரூ.2.47 லட்சம் கோடி கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,352 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 3,719 கி.மீ சாலை ரூ.58 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் 105 கி.மீ தொலைவுக்கு கிழக்கு கடற்கரை சாலை, ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை தயாராகி வருகிறது. சென்னைமெட்ரோ பகுதி-1, 2 திட்டத்துக்காக ரூ.72 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் ரூ.3,500 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளன. ரூ.1,260 கோடியில் சென்னை விமானநிலைய முனையம் திறக்கப்பட்டுள்ளது. 56 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தரப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் 84 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 62 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.கோவையில் ரூ.1,500 கோடியில் இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்