காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஏற்கெனவே வெண்குடி, வெங்கட்டாவரம் தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் கிடப்பில் கிடக்கின்றன. மழைக் காலத்துக்குள் நிதி ஒதுக்கி தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலாறு மாவட்டம் நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகாவில் 93 கி.மீ தூரமும், ஆந்திராவில் 33 கி.மீ தூரமும் ஓடுகிறது. தமிழ்நாட்டில் 222 கி.மீ. தூரம் ஓடி செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில் கடலில் கலக்கிறது.
பாலாற்றில் ஓடும் நீர் அடிக்கடி வீணாக கடலில் கலப்பதால் இதில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர், ஈசூர் வள்ளிபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் பகுதியில் மட்டும் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெண்குடி, வெங்கட்டாவரம் ஆகிய இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு நிதி ஒதுக்காததால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தடுப்பணைகள் அமைந்தால் அது விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் உள்ளிட்டவற்கும், நிலத்தடி நீராதாரம் பெருகுவதற்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் இந்த தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் அருகாமையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது: பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. பழைய சீவரம் பகுதியில் மட்டுமே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வெண்குடி, வெங்கட்டாவரம் பகுதியில் கட்ட வேண்டிய தடுப்பணைகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
சட்டப்பேரவையில் ஒரு தொகுதிக்கு ஒரு தடுப்பணை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெண்குடி உத்திரமேரூர் தொகுதியிலும்,வெங்கட்டாவரம் காஞ்சிபுரம் தொகுதியிலும் வருகிறது. எனவே இந்த இரு இடங்களிலும் தடுப்பணை அமைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் விவசாயத்துக்கு மட்டுமின்றி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கும், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் தடுப்பணை அமைப்பதுடன் அந்த தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால்களையும் சரி செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து காஞ்சிபுரம் பட்டு மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் சிவபிரகாசம் கூறும்போது பாலாற்றில் தடுப்பணை என்பது விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மிகவும் அவசியம். இந்த தடுப்பணை அமைக்கும் விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் அரசுக்கு எடுத்துக் கூறி தேவையான தடுப்பணைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் கேட்டபோது இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago