கடன் பிரச்சினையால் சிறுநீரகத்தை விற்க முயற்சி: கேரளாவில் நடக்க இருந்த அறுவை சிகிச்சை நிறுத்தம் - ஈரோடு மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

By எஸ்.கோவிந்தராஜ்

கடன் பிரச்சினைக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயன்ற கணவரை தடுத்து நிறுத்த வேண்டுமென அவரது மனைவி ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற இருந்த சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தடுத்து நிறுத்தப்பட்டது.

ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் ரவி (42). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சம்பூர்ணம்(37) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சம்பூர்ணம் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். ஈரோடு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த சம்பூர்ணம், ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு ஒன்றினை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ரவி, குடும்ப வருமானம் பற்றாக்குறையால், சில இடங்களில் கடன்பட்டுள்ளார். கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டி மட்டுமே கொடுத்து வந்தார். இந்நிலையில், எங்கள் குடும்ப வறுமையைத் தெரிந்து, அவிநாசியைச் சேர்ந்த ஒருவர் எனது கணவர் ரவியை அணுகி, உனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ.5 லட்சம் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து என் கணவர் என்னிடம் தெரிவித்தபோது, பணத்துக்காக சிறுநீரகத்தைக் கொடுக்கக்கூடாது என நான் தடுத்தேன். இருப்பினும் 22-ம் தேதி இரவு, அவிநாசியைச் சேர்ந்த அந்த நபருடன் எனது கணவர் சென்று விட்டார். எனது கணவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பது, 23-ம் தேதி இரவுதான் எனக்கு தெரியவந்தது. மருத்துவமனையில் தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி, எனது மாமனார் மூலம் கையெழுத்து போட வைத்துள்ளனர். எனவே, தாங்கள் தலையிட்டு, என் கணவரை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு பரிந்துரை செய்தார். மேலும், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தகவல் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட எஸ்பி சிவக்குமாரும், கேரள மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்திய கேரள போலீஸார் ரவியின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தடுத்து நிறுத்தி அவரை ஈரோட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு எஸ்பி சிவக்குமார் கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் வாயிலாக, சம்பூர்ணம் என்பவரது புகார் கிடைத்தது. அவரது கணவரை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக எர்ணாகுளம் அருகே உள்ள நெட்டூர் மராடு பகுதியில் உள்ள மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கடன் பிரச்சினையால் அவர் சிறுநீரகத்தை விற்பனை செய்வதாகவும் சம்பூர்ணம் தெரிவித்தார்.

இதையடுத்து எர்ணாகுளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் நான் தொலைபேசியில் பேசினேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, ரவியின் சம்மதத்தின் பேரில் அவரது சிறுநீரகம் எடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரவியிடம் பேசியபோது, தனக்கு 3 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், எனது விருப்பத்தின் பேரில்தான், இதற்கான முகவரைத் தொடர்பு கொண்டு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க வந்தேன் என்றும் தெரிவித்தார்.

ரவியின் மனைவி சம்பூர்ணம் இந்த சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிவித்து, அறுவைச் சிகிச்சையை நிறுத்துமாறு கூறினேன். அதனை ஏற்று, அவர்கள் அறுவைச் சிகிச்சையை நிறுத்திவிட்டு ரவியை ஈரோடுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.

‘இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா’ எனக் கேட்டபோது, ‘இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ரவி ஊர் திரும்பிய பின்பு அவரிடம் விசாரணை நடத்தப்படும். விதிமுறைகளை மீறி அவர் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயற்சித்திருந்தால், அவரைத்தான் குற்றவாளியாக கருத முடியும். எனவே, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ள நிலையில், பணத்தாசை காட்டி இதற்கு ஆள்பிடிக்கும் இடைத்தரகர்கள் குறித்தும், கடன்களுக்கு அரசு நிர்ணயம் செய்த வட்டி மட்டுமே வசூல் செய்யப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்