'தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதே பாஜக ஆட்சியில்தான்' - அமித் ஷா குற்றச்சாட்டுக்கு திமுக பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி" என திமுக தெரிவித்துள்ளது.

கருணாநிதி குடும்பம் 3 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது என்று வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

"ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் அமித் ஷா என்று அந்த அறிக்கையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தரப்பில், "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத அமித் ஷா , முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். பாஜக ஆட்சியில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை அமித் ஷாவே புரிந்துகொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதுபோன்ற சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்பதுதான் எங்களின் அடிப்படை குற்றச்சாட்டு.

தன்னுடைய பேச்சில் அப்படியொரு சிறப்புத் திட்டத்தை சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப் போன உள்துறை அமைச்சர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, “தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை” என்று வேலூரில் வெளிப்படையாகப் பேசிக் கைவிரித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பாஜக ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போது கூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

அதற்கு பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி!

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. அதற்கும் பாஜக அரசு ஒன்றும் பங்களிப்பு செய்திடவில்லை. ஏதாவது ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்தால்கூட ஆந்திரா, கர்நாடகா பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டதே தவிர, தமிழ்நாட்டிற்கு என்று பிரத்தியேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத்தையும் அளிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை முன்பு ஆந்திர முதல்வர் இருந்த சந்திரபாபு நாயுடுவின் அழுத்தத்திற்கு பயந்து மாற்றி, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்ததுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு.

தமிழ்நாட்டை எப்படி ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில்தான்.

ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அந்த ஒன்றிய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய வரி வருவாய்க்கு 100 ரூபாய் தமிழ்நாடு கொடுத்தால், பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு 20 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது. இதை விட மோசமாக நிதி ஒதுக்குவோம் எதிர்காலத்தில் என இப்போது வேலூரில் 25 எம்.பி. தொகுதி கொடுங்கள் என கேட்கிறாரா உள்துறை அமைச்சர்?

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும் பொழுது, அதே காலகட்டத்தில் உத்தரபிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்?

நிதிப் பகிர்வில் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தலைநகர் டெல்லி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மொழியில் சொன்னால் "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்ந்து கொண்டே போகிறது"

ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சி என்பது, சென்னை மாநகரத்திற்குப் பேரிடர் மேலாண்மைக்காக நிதி ஆணையம் பரிந்துரைத்த 500 கோடி ரூபாய் நிதியை இரண்டு ஆண்டுகளாக கொடுக்காத ஆட்சி. 2015-இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டாத ஆட்சி. இதுவரை அதற்கு நிதிகூட ஒதுக்காமல் அநீதி இழைக்கும் ஆட்சி. சென்னை மெட்ரோ ரயில்-II திட்டத்திற்கு 2019-ல் நிதி கேட்டும் இன்று வரை ஒப்புதல் வழங்காத ஆட்சி. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்திற்கான கோரிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்துள்ள ஆட்சி. ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்த ஆட்சி.

இவையெல்லாம்தான் பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு தந்த வேதனைகள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 2023-2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.5 விழுக்காடு. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 18 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 2023-24 ஒரு நிதியாண்டில் மட்டும் உத்தர பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 17,500 கோடி ரூபாய். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதே பாஜக ஆட்சியில்தான் என்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை.

சி.ஆர்.பி.எப் தேர்வைத் தமிழில் எழுத உத்தரவிட்டது பற்றி சிலாகித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். அதற்குக் கோரிக்கை வைத்ததே முதல்வர் ஸ்டாலின்தான். ஆனால் வங்கி, ரயில்வே, இராணுவம், அஞ்சல் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை ஒன்றிய அரசு இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் நடத்துகிறது. தமிழில் இல்லை. உள்துறை அமைச்சர் இதை மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை இந்திமயமாக்கி, அங்கு தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளது பாஜக ஆட்சிதான் என்பதை உள்துறை அமைச்சர் மறுக்க முடியுமா?

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் - வேலைவாய்ப்பு ஆகியவற்றை அராஜகமாகப் பறித்துள்ளது பாஜக ஆட்சிதான்.

தமிழ்நாட்டிற்கு ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சி வழங்கியது இந்தித் திணிப்பு, தமிழ்மொழியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு, திருப்பூர் கண்டெய்னர் மறைப்பு, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் என ஆளவிட்டு தமிழ்நாட்டின் நிர்வாகத்தை அடியோடு சீரழித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னால் இருந்த தமிழ்நாட்டைத் திட்டமிட்டு வீழ்த்தியது, நீட் கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது, உதய் திட்டத்தில் மிரட்டி கையெழுத்திட வைத்து தமிழ்நாட்டு மக்கள்மீது மின்கட்டண உயர்வை ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும் என்று கெடுபிடி செய்வது, ஒரு பயோமெட்ரிக் கேமிரா வேலை செய்யவில்லை என்பதற்காக ஸ்டான்லி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாட்டை அவமானப்படுத்தியது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒன்றிய அரசில் தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக்கமாட்டார்கள். ஏன் உயர்நீதிமன்றத்தில் கூட ஆட்சி மொழியாக்க அனுமதிக்கமாட்டார்கள். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள். ஏன், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கூட தமிழ்நாட்டிலிருந்து சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ் மீது பாசம் இருப்பது போல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேஷம் போடுவது எந்த ஆட்சி? அது சாட்சாத் பாஜக ஆட்சிதான்!

ஒன்பதாண்டு கால பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார். வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ என அனைத்தையும் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக்கி விட்டு, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

உள்துறை அமைச்சர் அவர்களே, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நீதிமன்றங்கள் ஆகியவற்றை உங்கள் “கோரப்பிடியில்” இருந்து விடுவியுங்கள். அப்புறம் தெரியும் உங்கள் 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழல் நடந்ததா அல்லது ஊழல் கோப்புகள் ஒவ்வொரு துறையிலும் உறங்கிக் கொண்டிருக்கின்றனவா என்று?

ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்பட வேண்டும்? ஊழலே இல்லை என்றால் ஏன் ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலேயே “நாட்டின் ரகசியம்” என வாதிட வேண்டும்?

நாட்டு மக்கள் குஜராத் கலவரத்தையும் - அந்த வழக்குகள் எப்படி நீர்த்துப் போக வைக்கப்பட்டன என்பதையும் - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு நீதிபதிக்கு என்ன ஆனது என்பதையும் இன்னும் மறந்து விடவில்லை என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருப்பதே ஒன்றிய பாஜக அரசுதான். அந்த அரசின் முகமூடியை நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிழித்தெறிந்துவிட்டார். அந்த ஆதங்கத்தில் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறப்புத் திட்டங்களை பட்டியலிட முடியாமல் வேலூரிலிருந்து திரும்பியிருக்கிறார் என்பதே எங்கள் முதலமைச்சருக்கு கிடைத்த முதல் வெற்றி.

இதே வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் அளிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, “மூழ்கும் கப்பலாக” இருக்கும் பாஜக இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் - தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்று மரியாதைக்குரிய அமித்ஷாவுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்