வாகன நிறுத்துமிடமான நடைபாதைகள்... திணறும் திருவல்லிக்கேணி - மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கப்படுமா?

By ம.மகாராஜன்

தலைநகர் சென்னையின் மையமான திருவல்லிக்கேணி வர்த்தகரீதியான தொழில்கள், ஏராளமான குடியிருப்புகள், திரும்பிய தெருவெல்லாம் தங்கும் விடுதிகள் என பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். அதன் அருகே சுற்றுலா தலமான மெரினா கடற்கரை, பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில், தென் இந்தியாவிலே பழமையான வாலாஜா மசூதி, எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், பல்வேறு திரையரங்குகள் என அதிகளவில் மக்கள் கூடும் இடங்களாக உள்ளன.

பெல்ஸ் சாலையில் நடைபாதையில் நிற்கும் வாகனங்கள்.படங்கள்: எஸ்.சத்தியசீலன்

இது தவிர எலக்ட்ரானிக் பொருட்களுக்கு புகழ்பெற்ற ‘ரிச்சி ஸ்டீரிட்’, கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களும் திருவல்லிகேணியில் உள்ளன. இத்தகைய நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த ஏதுவாக, போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாததது வரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

திருவல்லிக்கேணி பகுதியில் வாகன ஓட்டிகள் ஏதேனும் பொருட்களை வாங்க வருகையில் சாலையிலேயே தங்கள வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினமும் சண்டை, சச்சரவுகளால் திருவல்லிகேணியே திண்டாடுகிறது. மேலும், அவ்வப்போது சிறு விபத்துகளும் நிகழ்கின்றன.

திருவல்லிக்கேணி ஹைரோடு, பாரதி சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, எல்லீஸ் சாலை உட்பட பல்வேறு இடங்களில் சாலையின் ஒருபுறம் 5 நிமிடத்துக்கு வாகனம் நிறுத்தப்பட்டால், அச்சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு ஆளாக்குகிறது. அதேபோல் திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, பெல்ஸ் சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிரம்பி வழிகின்றன.நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் கூட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

போக்குவரத்து போலீஸார் அவ்வப்போது சீரமைத்தாலும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் மாநகரப் பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதுதவிர தங்கும் விடுதிகள், குடியிருப்புகளில் போதிய இடமில்லாததால் தெருவோரங்களிலும், சந்துகளிலும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து நிறுத்தி வருகின்றனர். எனவே திருவல்லிக்கேணியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ‘மல்ட்டிலெவல் பார்க்கிங்’ (வாகன நிறுத்துமிடம்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: அறிஞர் (சலூன் கடைக்காரர்): திருவல்லிக்கேணி ஹைரோட்டில் போக்குவரத்து நெரிசலால் மாலையில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பவேவெகு நேரமாகிவிடுகிறது. எனது கடை முன்பு கூட தினசரி ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில் பொது வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

அஸ்கர்தீன் (கூரியர் ஊழியர்): இங்கு பெரும்பாலான கட்டிடங்கள் ஒவ்வொன்றும் நெருக்கமாக இருப்பதால், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடமில்லை. எனவே பொருட்களை விநியோகம் செய்ய செல்லும் போது, வேறு வழியில்லாமல் சாலையோரங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறோம். அதேபோல் சாலைகளும் சிறியதாக இருப்பதால் ஒரு பேருந்து சாலையில் சென்றாலே, எதிர்புறத்தில் செல்ல முடியாத நிலை உருவாகிறது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேருந்தின் வழித்தடங்களை மாற்றிவிட வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் ரவி, முரளி,குப்புசாமி: இருசக்கர வாகனங்களின்எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு மேன்சன்கள் முன்பும் 20 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஐஸ் - அவுஸ் அருகே அரசு தரப்பில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டது. அதில் நாட்களுக்கு ஏற்ப ஒருபுறம் வாகனங்கள் செல்லவும், மறுபுறம் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது 3 மாதம் மட்டுமே அமலில் இருந்தது. இதை மீண்டும் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.

இது குறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமன் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அனுமதியின்றி சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான அபராதமானது, வாலாஜா சாலை மற்றும் காமராஜர் சாலையில் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு விதிக்கப்படுகின்றன. மேலும் மாநகராட்சியுடன் சேர்ந்து, நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து அகற்றப்பட்டுவருகின்றன.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகரில் அமைக்கப்பட்டிருப்பது போல் கட்டணத்துடன் கூடிய ‘மல்டிலெவல்’ வாகன நிறுத்திமிடத்தை மாநகராட்சி அமைத்துகொடுத்தால், அது வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். மாநகராட்சிக்கும் வருமானமும் கிடைக்கும்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொதுமாகவே 32 அடிசாலையில் தான் வாகன நிறுத்துமிடத்தை அமைக்க முடியும். ஆனால் திருவல்லிக்கேணியில் அதற்கான கட்டமைப்பு மற்றும் இடவசதி இல்லை. உபயோகப்படுத்தாத அரசு கட்டிடமோ, இடமோ காலியாக இல்லாததால், ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைப்பதற்காக சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை. மாநகராட்சி தரப்பில் சென்னையில் ஏற்கெனவே 58 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில் திருவல்லிக்கேணியிலும் வாலாஜா சாலை உட்பட சில இடங்களில் தனியார் கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE