கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை (ஜூன் 12) திறக்கப்படுகின்றன. விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வியில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ்கடந்த மே 26-ம் தேதி அறிவித்தார்.

பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை மேலும் தள்ளிவைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

வரும் 2023-24-ம் கல்வி ஆண்டில்6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை(ஜூன் 12) முதல் பள்ளிகள் திறக்கப்படஉள்ளன. இதற்காக அனைத்து பள்ளிவளாகங்களிலும் தூய்மை பணிகள் உட்பட முன்னேற்பாடுகள் முழு வீச்சில்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும். பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற இலவச நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தொடக்கநாளிலேயே பாடங்களை நடத்தாமல், மாணவர்களின் விடுமுறை நிகழ்வுகள் பற்றி கேட்டறிதல் போன்ற உளவியல் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்’ என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், மாணவர்கள் நலன் கருதி கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.அதனால், பாடங்களை நடத்த ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.

விளையாட்டு போட்டிகள் விவகாரம்: பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவறுதான். அதை ஒப்புக்கொள்கிறோம். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததால், தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. தவறு இழைத்த மாநில உடற்கல்வியல் ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய விளையாட்டு போட்டி விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக இப்போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் இதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர். தகவல் இடைவெளி காரணமாக இவ்வாறு நடந்துள்ளது. வரும் நாட்களில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 secs ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்