தேசிய லோக்-அதாலத்தில் 3,949 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு - ரூ. 131.96 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் 3 ஆயிரத்து 949 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.131.96 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் ஆகியோரது அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் நேற்று தேசிய லோக்-அதாலத் நடத்தப்பட்டது.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமையில் ஆணைக்குழு நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், எஸ்.எம்.சுப்ரமணியம், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோரது மேற்பார்வையில் தேசிய லோக்-அதாலத் நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் 149 அமர்வு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.பரதசக்ரவர்த்தி, பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரது தலைமையில் 4 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோரது தலைமையில் 3 அமர்வுகளும், தவிர மாநிலம் முழுவதும் 149 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் மொத்தம் 3 ஆயிரத்து 949 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.131.96 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீ்ட்டுத் தொகைக்கான உத்தரவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா வழங்கி னார்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான கே.சுதா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE