நெல்வயலுக்குள் இறங்கி தாம்புகட்டும் ஒற்றை காட்டு யானை: பரிதாப நடுக்கத்தில் சாடிவயல் கும்கிகள்!

By கா.சு.வேலாயுதன்

 

கடந்த ஒரு வாரமாக சிறுவாணி மலையடிவாரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ஒற்றை யானையால் சாடிவயல் முகாமில் இருக்கும் சுஜய், பாரி என்கிற கும்கிகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகியிருக்கிறது.

கோவை குற்றாலம், அதையடுத்துள்ள சிறுவாணிக்காடுகள், வெள்ளியங்கிரி மலை, அதையடுத்த நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டினம், வைதேகி நீர்வீழ்ச்சி பகுதிகள் எப்போதும் காட்டு யானைகள் உலாவும் பிரதேசமாக உள்ளது. இந்த யானைகள் ஊருக்குள் நுழைவதை விரட்ட கோவை குற்றாலம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்கிகள் முகாம் ஏற்படுத்தப்பட்டது.

இதற்கென நஞ்சன், பாரி என இரண்டு கும்கிகள் கொண்டு வரப்பட்டன. அதில் நஞ்சன் மேட்டுப்பாளையம் முகாமிற்கு சென்று இறந்தது. அதனால் பாரிக்கு துணையாக இன்னொரு யானை சுஜய் கொண்டு வரப்பட்டது. என்றாலும் நஞ்சனுடன் இருந்த இணக்கத்தை பாரி இதனுடன் கையாளவில்லை. இரண்டுக்கும் மோதல் போக்கு இருந்ததால் இரண்டும் 100 மீட்டர் இடைவெளியிலேயே வைக்கப்பட்டன. ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும் தனித்தனியாகவே பயன்படுத்தப்பட்டன.

இதே சமயம் சாடிவயல் முகாம் அமைந்திருந்த இடம் டாப் ஸ்லிப், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்திருந்ததை போல் அல்லாமல், மூர்க்கமான காட்டு யானைகள் உலாவும் இடத்தில் உள்ளது. எனவே இந்த முகாமில் கும்கிகள் தங்க வைக்கப்பட்ட நாளிலிருந்தே காட்டு யானைகள் கூட்டமும், ஒற்றை ஆண் யானைகளும் அவ்வப்போது முகாமிற்குள் ஊடுருவி கும்கிகளை தாக்க முயற்சித்திருக்கிறது. இதில் கும்கிகளே மிரண்டு நடுங்க, பாகன்கள் பட்டாசுகள் வெடித்து வீசி அவற்றை விரட்ட வேண்டிய நிலை பல முறை ஏற்பட்டுள்ளது.

நஞ்சன் இருந்தவரை பாரியுடன் சேர்ந்து இந்த காட்டு யானைகளை ஓரளவு சாமர்த்தியமாக விரட்டி விட்டன. சுஜய்யுடன் தற்போது பாரி இணக்கமாக இல்லாததால் அதுபோல இப்போது நடக்கவில்லை. பலசாலியான, கொஞ்சம் இளமையான பாரி தன்னிச்சையாக காட்டு யானையை விரட்டும் அளவு சுஜய்க்கு உடலில் பலம் இல்லை. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு முகாமிற்குள் நுழைந்த மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை சுஜய்யை தாக்கியது. அதனுடனான 20 நிமிடப் போராட்டத்தில் சுஜய்யின் ஒற்றைக் கொம்பு உடைந்தது. அடுத்த ஒரு கொம்பும் பலவீனப்பட்டது. அந்த காட்டு யானையை ரொம்பவும் சிரமப்பட்டே பாகன்கள் விரட்டினர். சுஜய்க்கு சிகிச்சையும் அளித்தனர். அதற்கு பிறகு ரொம்பவும் சோர்வு தட்டியே காணப்படுகிறது சுஜய். அது இனி ஒரு முறை காட்டுயானைகள் நுழைந்து தாக்கினால் தடுத்து விரட்டக்கூடிய சக்தியில்லாமல் இருக்கிறது. எனவே இதற்கு ஓய்வு கொடுத்து முதுமலைக்கே அனுப்பிவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள்.

இந்த சூழ்நிலையில் தற்போது இரண்டு வாரங்களாக ஒரு பெரிய கொம்புள்ள ஒற்றை யானை இங்கே உலா வர ஆரம்பித்துள்ளது. இது சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம் அருகே உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த வழியே போகிற வாகனங்கள், மனிதர்களை துரத்தவும் செய்கிறது. எனவே கடந்த இரண்டு வாரமாக இப்பகுதி மக்கள் எச்சரிக்கையாகவே இந்தப் பகுதிக்கு சென்று வருகிறார்கள். இப்போது அந்த ஒற்றை யானை கும்கி முகாமிற்கு பின்புறம் நடைபோட ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் முகாமிற்கு பின்புறம் உள்ள பெரிய அகழி ஓரங்களிலேயே நடந்து கொண்டிருந்த அந்த யானை, இங்கு காட்டை ஒட்டி நாற்று நடவு செய்யப்பட்டுள்ள நெல்வயலிலும் இறங்கி தாம்பு கட்டி சென்றுள்ளது. இதனால் மீண்டும் கும்கிகள் அச்சத்தில் நடுங்க ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து வன ஊழியர்கள் சிலர் கூறுகையில், ''இப்போது உலாவுவது எப்போதும் காணப்படும் யானை அல்ல. உருவத்தில் மிகப் பெரிய, மிக நீளமான தந்தம் உடையதாக உள்ளது. இந்த மாதிரி சைசில் யானையை இந்தப் பகுதியில் நாங்களே பார்த்ததில்லை. ஏற்கெனவே ஒரு கொம்பை இழந்த நிலையில் மிகவும் பலவீனப்பட்டு உள்ளது சுஜய். அது இனி உடல்நிலை தேறுவது ரொம்ப சிரமம் என்பதை எவ்வளவோ தூரம் அதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டோம். இந்த நேரம் பார்த்து இன்னொரு கும்கி பாரிக்கு முன்னங்காலில் நரம்பு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் காட்டுக்குள் நடக்க முடியவில்லை. அதனால் நரம்பு சுளுக்கு பார்க்க டாக்டருக்கு சொல்லியிருக்கிறோம். அவர் வரவில்லை. எனவே பாரிக்கு வேப்ப எண்ணெயை கொடுத்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் முகாமை சுற்றி உலாவிக் கொண்டிருக்கும் அந்த ஒற்றை யானை இவற்றைத் தாக்கினால் ரொம்ப சிரமம்தான். இவற்றுக்கு எதிர்த்து போராடக்கூடிய சக்தி கூட இருக்குமா என சந்தேகம்தான். எனவே இதற்கு மாற்றாக வேறு ஏதாவது செய்யச் சொல்லி அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம்'' என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்