சேலம்: "கடந்த ஒன்பது ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று சேலத்தில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலம், ஐந்து ரோட்டில் சனிக்கிழமை நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியது: "இந்த சேலம் மண்ணில் தான் திராவிட இயக்கம் உருவானது. கடந்த 1997ம் ஆண்டு சேலத்தில் நடந்த திமுக மாநாட்டில் இளைஞர் அணிக்கு தலைமை ஏற்றதும்; 2004-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் 54 அடி உயர கட்சி கம்பத்தில் கொடியேற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை ஆண்டு முழுவதும் ஊர்கள் தோறும் கொண்டாடும் விதமாக ‘எங்கேயும் கலைஞர்’ தலைப்பில் கவியரங்கம், பட்டிமன்றம், மார்பளவு சிலை திறப்பு, கட்சி கொடி கம்பம், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி நிர்வாகிகள் செயலாற்றிட வேண்டும். கட்சியில் உழைக்கும் கழகத்தினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். தொண்டர்களின் பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்டு, நிவர்த்தி செய்திட நிர்வாகிகள் முன் வரவேண்டும். சேலம் செயல் வீரர்கள் கூட்டமானது, வரும் நாடாளுமன்றத்துக்கு அச்சாரமிடும் கூட்டமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது.
தமிழகத்தில் பத்தாண்டாக அதிமுக ஆட்சி நடத்தி பாழ்படுத்தியது. மக்கள் அதிமுகவை அகற்றி விட்டு, நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் முதல் எண்ணற்ற பல நூறு திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் கட்சி வளர்ச்சி பாதை நோக்கி பயணமாகி வருகிறது. இதன் பயனாக திமுக-வில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
» ‘ப்ரேக்கிங் பேட்’ வெப் சீரிஸ் புகழ் நடிகர் மைக் படாயே காலமானார்
» WTC Final நாள் 4 | ஏமாற்றிய சுப்மன் கில் - வெற்றி இலக்கான 444 ரன்களை துரத்தும் இந்தியா!
‘ஒரு புறம் கட்சி வளர்ச்சியும்; மறுபுறம் மாநில வளர்ச்சியையும்’ இரு கண்களாக கொண்டே செயலாற்றி வருகிறேன். இனி எந்த காலத்திலும் திமுக ஆட்சியை, எந்த சக்தியாளும் வீழ்த்த முடியாத அளவுக்கு கழகத்தை கட்டமைத்து எழுப்பியுள்ளேன்.நாம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது. மத்திய அரசு முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டாலும், அதனை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த ஒன்பது ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் ஆட்சி வகித்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி கொண்டிருந்த போது, மெட்ரோ ரயில் திட்டம் உள்பட 619 திட்டங்கள் கொண்டு வந்து, 80 சதவீத பணி நிறைவேற்றப்பட்டது.
இந்திய அளவிலான மாநிலங்களில் தமிழகத்துக்கு 11 சதவீதம் நிதியை காங்கிரஸ் ஆட்சியில் பெற்றுள்ளோம். ஆனால், பாஜக மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். பாஜக ஆட்சி சாதனையாக தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, குடியேறும் சட்டத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கியும், ‘நீட்’ தேர்வு கொடுமையுமே மிகுந்துள்ளது.
சசிகலா காலை வாரி, பாஜகவுக்கு பல்லாக்கு தூக்கி ஆட்சியை பிடித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ஜெயலலிதா, மறைவுக்கு பிறகு சந்தித்தெல்லாம் தோல்வி முகமே தவிரே வேறேதுமில்லை. அண்ணாபிறந்த நாள் விழாவில் பெண்களுக்கான உரிமை தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படும். கழக செயல்வீரர்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தி, எதிர் அணியினர் தரும் பொய் தகவலை முறியடித்து, திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
‘நாடும் நமதே; நாடளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் நமதே’ என்ற முழக்கத்துடன் கழக செயல் வீரர்கள் கட்சி பணியாற்றி வெற்றிக்கு வித்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல்வர் சொன்ன குட்டி கதை: முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பேசும் போது, "அதிமுக - பாஜக கூட்டணியானது கரடி பிடித்த கதையாக உள்ளது. ஒரு ஊரில் கடும் வெள்ளம் அடித்து சென்றது, வெள்ளத்தில் பல பொருட்களும் மிதந்து சென்றது. இரு கரையிலும் இருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்து சென்ற பொருளை எடுக்க போட்டி போட்டனர். அப்போது, கரையில் நின்றிருந்த ஒருவர், வெள்ளத்தில் கருப்பாகவும், பெரிதாகவும் மிதந்து வந்த பொருள் மீது ஆசைப்பட்டு, அதனை எடுக்க ஆர்வப்பட்டதுமில்லாமல், அந்த கருத்த, பெருத்த பொருளை கைப்பறினார். அவர் கைப்பற்றிய அந்த பொருளானது கரடி என்பதை அறிந்த அந்த நபர் அதனை விட்டு விலகிடலாம் என்றாலும், அந்த கரடியானது விடாப்படியாக அவரை பிடித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு தான் அதிமுக-பாஜக கூட்டணியானது தமிழகத்தில் உள்ளது," என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago