தேசிய விளையாட்டு போட்டி | தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை - அதிகாரிகள் மீது உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவில் கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல், கேரம், சதுரங்கம், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 32 விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இவற்றில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவர்களை தேசிய போட்டிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மற்றும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை உட்பட பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு தேசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை மே 29-ம் தேதிக்குள் இணையவழியில் பதிவு செய்ய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் சுமார் 250-க்கும்மேற்பட்ட மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சுரேஷ் கூறும்போது,‘‘கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேசிய போட்டிகளில் தமிழக மாணவர்கள் 233 பதக்கங்கள் பெற்று 7-ம் இடத்தை பெற்றனர். நடப்பாண்டு தமிழக அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் விளையாட்டுப் பிரிவில் மதிப்பெண் பெறும் வாய்ப்பை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர். இத்தகைய தவறுகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றார்.

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பினர் இருபிரிவாக பிரிந்துள்ளதால் முறையான தகவல் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கிடைக்கவில்லை. தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக எந்த கடிதமும் பள்ளிக்கல்வித் துறைக்கு வரவில்லை. இதனால் வீரர்களை தேர்வு செய்து அனுப்ப உரிய காலஅவகாசம் கிடைக்கவில்லை’’ என்றனர்.

இதற்கிடையே, தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர்ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்: பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து முறையான தகவல் பரிமாற்றம் செய்யாததாலும், பணியில் அலட்சியமாக இருந்ததாலும் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்