கோவை: மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவதிப்படுவதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை தொழில்முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உற்பத்தித்துறையின்கீழ் ஜவுளி, பம்ப், கிரைண்டர், வார்ப்படம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழக அரசு சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தியது மற்றும் ஏற்கெனவே மின் கட்டணத்தை உயர்த்தியதால் தொழிலில் பல்வேறு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தொழில்முனைவோர், அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘டேக்ட்’ தொழில் அமைப்பின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், ‘சிஸ்பா’ கவுரவ செயலாளர் ஜெகதீஷ், ‘ஆர்டிஎப்’ தலைவர் ஜெயபால், ‘டான்சியா’ துணைத் தலைவர் சுருளிவேல் உள்ளிட்டோர் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று பரவலால் தொழில் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகள் நெருக்கடியை எதிர்கொண்டன. அதிலிருந்து முழுமையாக மீள்வதற்குள் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளுடன் தமிழக அரசு அமல்படுத்திய 100 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணம் என்பது முதலில் இல்லை. சமீபத்தில் புதிதாக அமல்படுத்தியுள்ளது ஏற்புடையதல்ல. தவிர நிலைக்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் சில தொழில்முனைவோர் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். பலர் விரைவில் குறுந்தொழில் நிறுவனங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் உள்ளனர்.
ஜவுளித்தொழிலை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 1,000 குறு, சிறு நூற்பாலைகள் உற்பத்தியை 50 சதவீதமாக குறைந்துள்ளன. தற்போது மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் பல நூற்பாலைகள் முற்றிலும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்திலிருந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இருமுறை உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும். இதுவே அனைத்து தொழில்முனைவோரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago