சென்னை | தேவையான நேரத்தில் பேருந்து வராமல் தவிக்கும் பயணிகள்: முறைப்படுத்தி இயக்க கோரிக்கை

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: தேவையில்லாத நேரத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் இயக்குவதை தவிர்த்து, தேவையான நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் சுமார் 80 லட்சம் மக்கள் வாழும் நிலையில், பெரும்பாலானோர் போக்குவரத்து தேவைக்காகபேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். அவர்களுக்காக மாநகர போக்குவரத்துக் கழகம்சார்பில் 629 வழித்தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண சேவை வழங்கியதையடுத்து, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணி்க்கை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால், பேருந்து சேவையை பொருத்தவரை சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதே பயணிகள் தரப்பில் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாகும். இது ஒரு புறமிருக்க குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ச்சியாக வருவதும், இல்லாவிட்டால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையே இருப்பதாக புகார் கூறுகின்றனர். குறிப்பாக இது புறநகர் பகுதிகளில் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

இதுகுறித்து மாடம்பாக்கத்தைச் சேர்ந்த டி.பாஸ்கர் கூறியதாவது: எங்கள் பகுதியைபொருத்தவரை 31 ஏ வழித்தட எண் கொண்ட பேருந்துகள் அகரம்தென் - தாம்பரம் மேற்கு இடையேயும், 105 ஏ வழித்தட எண் கொண்ட பேருந்துகள் சிறுசேரி- தாம்பரம் மேற்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.

டி.பாஸ்கர்

இப்பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவது இல்லை. மாலை வேளையில் பேருந்து வருவதற்கு தாமதமாகிறது. முன்பு 105 ஏ எண் கொண்ட 4 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரச்சினைக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியதாவது:

எதிர்பாராத விதமாக பேருந்துகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அந்த பேருந்து அப்படியே பணிமனைக்கு திருப்பி விடப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரத்துக்கு பேருந்துகள் வருவதில்லை. அதிகமாக பேருந்து சேவை தேவைப்படும் வழித்தடம் குறித்து ஆய்வு செய்து, பேருந்துகளை இயக்க வேண்டும்.

சாந்தப்பிரியன் காமராஜ்

இது மட்டுமின்றி பழைய வழித்தடங்கள் மற்றும் நேரத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் மட்டுமின்றி நகருக்குள்ளும் தேவையில்லா நேரங்களில் தொடர்ச்சியாக பேருந்துகள் வருவதை காண முடியும். எனவே, நேரத்துக்கேற்பவும் பேருந்து சேவையை உடனுக்குடன் மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பயணிகளின் குற்றச்சாட்டு குறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னையில் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்குவது கண்டறியப்பட்டு, நேரம் போன்றவை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை பஸ் செயலியின் தரவுகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருபுறமிருக்க பயணிகளின் புகார்களையும் கருத்தில் கொண்டு, பேருந்து சேவை சீரமைக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்