தமிழை வைத்து 50 ஆண்டு காலம் அரசியல் நடத்தியவர்கள் சித்த மருத்துவத்துக்காக என்ன செய்தார்கள்? - டாக்டர் சிவராமன் கேள்வி

By மு.அப்துல் முத்தலீஃப்

மத்திய அரசு ஆயுர்வேதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் போது 50 ஆண்டுகாலம் தமிழை வைத்து அரசியல் நடத்தியவர்கள், தமிழர்களின் மருத்துவமான சித்த மருத்துவத்தினை வளர்ப்பதற்கு என்ன செய்தார்கள் என சித்த மருத்துவர் சிவராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்க சித்த மருத்துவ மூத்த மருத்துவர் சிவராமனிடம் 'தி இந்து' தமிழ் இணைய தளம் சார்பில் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

நிலவேம்பு விவகாரத்தில் அரசின் நிலை என்ன? அலோபதி மருத்துவர்கள் ஏன் நில வேம்பை அங்கீகரிப்பதில்லை?

அடிப்படையில் துறை சார்ந்த ரீதியாக மனத்தடை உள்ளது. பொதுவாகவே நவீன மருத்துவர்களுக்கு இது குறித்த தயக்கமும், மனத்தடையும் உள்ளன. தேநீரை ஏற்றுக்கொள்கிறார்கள். அது மருத்துவ குணமுள்ள பானம்தான். அதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

பாரம்பரிய தமிழ் மருந்து என்றால், தமிழர்கள் பயன்படுத்துவது என்றால், அது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமற்றதுதான் என்ற ஆழமான தவறான அறிவியல் அடிப்படைவாதத்தை அவர்கள் வைத்துள்ளார்கள்.

இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் என்று எந்தக் கஷாயத்தைச் சொன்னாலும் அறிவியல் பூர்வமற்றது என்று நினைக்கிறார்கள்.

2015 ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் யுல் யூத்து எனும் சீன மருத்துவர். மைக்ரோ பயாலஜிஸ்ட். சீனா முழுக்க ஒரு காய்ச்சல் வந்த போது சீன மருத்துவமாக ஒரு மூலிகையைப் பயன்படுத்தினார்கள்.

அப்போது அந்த சீன மருத்துவர், பாரம்பரியமாகப் பயன்படுத்தும் கஷாயத்தில் என்ன இருக்கிறது என்று அந்த மூலிகையில் இருந்த அர்டிமிசின் என்ற ஒரு பொருளை பிரித்தெடுத்தார். அந்த மருந்துதான் மலேரியாவுக்கு இன்று உலகம் முழுதும் உள்ள ஒரே மருந்து.

அப்போது 25 மில்லியன் மக்களைக் காப்பாற்றினார் என்பதற்காக அந்த மருத்துவருக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

அப்போது அந்த மருத்துவர் நோபல் பரிசு அரங்கில் சொன்னது இதுதான்... “எங்கள் நாட்டில் இனம் புரியாத காய்ச்சல் வந்தபோது அவர்கள் கொடுத்த மூலிகையை ஆராய்ந்தபோதுதான் எனக்கு இப்படிப்பட்ட மருந்து கிடைத்தது. பாரம்பரியமாக எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.  அதைக் கொண்டு வர வேண்டும்; பயன்படுத்த வேண்டும்'' என்று அவர் பேசினார்.

அவருடன் பல நவீன மருத்துவர்கள் இருக்கிறார்கள், சீன அரசு துணை இருக்கிறது. அதனால் தான் சீன மருத்துவம் உலகில் முதலிடத்தில் இருக்கிறது.

ஆனால் இங்கே என்ன மனோபாவம் இருக்கிறது. பாரம்பரியமான ஒன்று வந்தால் அதை அழுக்கு போல், தீண்டாமை பொருள் போல் பார்க்கும் மனோபாவம் நவீன அறிவியலாளர்கள் மத்தியில் உள்ளது. இந்தப் பார்வை மாறினால்தான் மருத்துவத்துறையில் பெரிய மாற்றம் வரும்.

எல்லோருமே டிசைண்ட் டிரக் கேட்கிறார்கள். நவீன முறையில் ஆராய்ச்சி செய்து அதை மருந்தாகக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். சாதாரண மருந்தை அப்படி ஆராய்ச்சி செய்து கொண்டுவர வேண்டும் என்றால் பல பில்லியன் டாலர் செலவாகும். அப்படிச் செலவு செய்தால் அதற்கு மருந்து கம்பெனிக்காரர்கள் என்ன விலை வைப்பார்கள், யோசித்துப் பாருங்கள்.

அப்படிப்பட்ட மருந்துக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கும் மக்கள், பாரம்பரிய மருந்துக்கு விஞ்ஞான அடிப்படைகள் வழங்கும் ஆராய்ச்சிக்கு ஆதரவு தர யோசிக்கிறார்கள். இங்கே வாதம் செய்யும் யாருக்கும் RP (reverse pharmacology) என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை.

இந்தியாவின் மூத்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள் பாரம்பரிய மருந்துக்கு விஞ்ஞான அடிப்படைகள் வழங்கும் ஆராய்ச்சிக்கு (reverse pharmacology) மாற வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். இந்தியாவின் மூத்த மருத்துவர் அசோக் வைத்தியா என்பவர் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் தலைவராக இருந்தவர்.

இந்திய ஐசிஎம்ஆரின் ஆலோசகர், 85 வயது அவருக்கு. அவர் என்ன சொல்கிறார் என்றால் இந்தியாவில் திரும்ப திரும்ப சித்தா, ஆயுர்வேதா, யுனானி அனுபவங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. அதிலிருந்து நல்ல மருந்தை பாரம்பரிய மருந்துக்கு, விஞ்ஞான அடிப்படைகள் வழங்கும் ஆராய்ச்சி (reverse pharmacology) மூலம் கண்டுபிடிப்போம் என்கிறார்.

இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை உள்ளது. மற்ற நாடுகள் எப்படி?

இன்று உலகமே பாரம்பரிய மருந்துக்கு விஞ்ஞான அடிப்படைகள் வழங்கும் ஆராய்ச்சியை (reverse pharmacology) நோக்கித்தான் செல்கன்றன.  சமூகத்தில் ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அனைத்து மருத்துவர்களும் ஒன்றிணைய வேண்டும். என் மருத்துவம் உன் மருத்துவம் என்ற எண்ணம் உள்ளது. இது தவறான எண்ணம்.

நவீன அறிவியலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஆங்கிலமா, சித்தாவா ஆயுர்வேதமா என்றில்லை. இந்திய மக்களுக்கு இங்குள்ள பொருளாதாரத்துக்கு, இங்குள்ள சவால்களுக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

நவீன அறிவியல் பேசுபவர்கள், வெளிப்படை அறிவியல் பேசுபவர்கள், இணையத்தில் பேசுபவர்கள் அனைவரும் எல்லோருமே மேற்கத்திய ஆதிக்கம் உள்ள வேதி மூலப் பொருட்களை பிடித்துக்கொண்டு நிற்கிறார்களே தவிர நிலவேம்பு கஷாயம் வேறு இதன் கூறு வேறு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதில் அப்படி போட்டிருக்கிறான் இதில் இப்படி போட்டிருக்கிறான் என்று வாதத்தைத்தான் வைக்கிறார்கள். இந்தப் பார்வை மாற வேண்டும்.

நுனிப்புல் மேய்கிறார்கள் என்கிறீர்களா?

நுனிப்புல் மேய்கிறார்கள் என்று கூட கூற முடியாது. விஷமத்தனம். ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதன் மூலம் உளவியல் ரீதியாக திருப்தி அடைவது நம்ம ஊரில் அதிகரித்து வருகிறது. எனக்குத்தான் முதலில் தெரியும், நான் தான் முதலில் பார்த்தேன் என்று பரபரப்பாக கூறுவது. எதையும் ஆழமாக நுட்பமாக பார்க்கும் மன நிலை இல்லை.

இது போன்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?

அரசு உறுதியாக நடக்க வேண்டும். சுகாதார அமைச்சர், சித்த மருத்துவ துறை சார்ந்த இயக்குனர் முதல் பலரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் செய்தியாளர்களை சந்திக்கணும். இது போன்று தவறான மருத்துவ பிரச்சனைகளை கிளப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிக்க வேண்டும்.

ஒரு மருந்தை தவறாக சித்தரிப்பதும், ஒரு இடத்தில் குண்டு வைப்பேன் என்று கூறுவதும் ஒன்றுதானே. மக்களை பீதியில் ஆழ்த்தும் விஷயங்கள் தானே.

நீங்கள் சொல்வது போல் பில்லியன் கணக்கில் ஆராய்ச்சிக்கு செலவாகும் என்கிறீர்கள். ஏன் இதை அரசு செய்யக்கூடாது?

தாராளமாகச் செய்யலாம். இது மட்டுமல்ல டெங்கு இன்று பெரிய விஷயமாக உள்ளது. சவாலாக இருக்கக்கூடிய சர்க்கரை வியாதி, புற்றுநோய் போன்றவற்றிற்கு கூட்டாக நவீன அறிவியலையும், பாரம்பரிய அறிவியலையும் இணைத்து கூட்டு ஆய்வு நிறைய நடக்க வேண்டும். அது இப்போது நுனிப்புல் அளவுக்குத்தான் நடக்கிறது. மத்திய அரசு செய்கிறது.  ஆனால் ஆயுர் வேத மருத்துவத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சித்த மருத்துவத்தை மிகச்சொற்பமாகத்தான் பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் இது போன்ற ஆராய்ச்சி என்ன நிலையில் உள்ளது?

ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழர், தமிழ் மருத்துவம் என்று தமிழை முன்னிருத்தி வைத்து அரசியல் நடத்தும் இவர்கள் யாருமே இதுக்கான அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரிய முன்னுரிமை கொடுக்கவேண்டும். ஆனால் அதற்காக இவர்கள் எதையும் செய்யவில்லை, அதற்கான ஆழமான பார்வையே இவர்களிடம் இல்லை.

2006 முதல் இந்த பிரச்சினை மாறிமாறி வருகிறது. 2006-ல் சிக்குன் குனியா வந்தது, 2012-ல் டெங்கு வந்தது. இன்றுவரை அரசாங்கம் அல்லது சுகாதாரத்துறை செயலரே சொல்லட்டும். நாங்கள் பெரிய ஆய்வை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளோம். சித்த மருத்துவர்கள், நவீன மருத்துவர்கள் இணைந்து உள்ளடக்கி குழு பெரிய ஆய்வு நடத்தும்.

வருங்காலங்களில் சிக்குன் குனியா , டெங்கு போன்றவை வராமல் தடுக்கவும் வந்தால் என்ன செய்வது என்பதை நவீன அறிவியல் மருத்துவமும் சித்தாவும் இணைந்து அறிக்கை வெளியிடும் என்று அறிவிக்கச் சொல்லுங்கள். ஏன் செய்ய மறுக்கிறார்கள்.

இவ்வாறு மருத்துவர் சிவராமன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்