இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; வீட்டு மின் கட்டணத்தில் மாற்றமில்லை - தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டணம் தொடரும். மேலும், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியின் திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் உத்தரவுபடி, மின் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வை ஈடுசெய்ய, நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

அதேபோல, 2022-ல் மத்திய அரசு வெளியிட்ட மற்றொரு உத்தரவு, மின் கட்டணத்தை மாதந்தோறும் உயர்த்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மின் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வால் ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப். 9-ம் தேதி, 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை அறிவித்தது. அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணம் அமல்படுத்தப்பட்டது.

மேலும், அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறையும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பிட்டு, அதன்படிக் கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம், இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும்.

இதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும்போது, மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டதுடன், கடந்த ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டதையும் கருத்தில் கொண்டு, 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுக்குப் பதிலாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

எனினும், இந்த குறைந்த உயர்வில் இருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்குடன், வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத கட்டண உயர்வையும் தமிழக அரசே ஏற்று, மின் வாரியத்துக்கு மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, வீட்டு இணைப்பு களுக்கு எவ்விதக் கட்டண உயர்வும் இருக்காது. மேலும், வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும், யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயரும்.

நடப்பாண்டில், மகாராஷ்டிரா (யூனிட்டுக்கு 62 பைசா), கர்நாடகா (70 பைசா), ஹரியாணா (72 பைசா), மத்திய பிரதேசம் (33 பைசா), பிஹார் (147 பைசா) உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட் டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்