டெங்கு காய்ச்சல் அச்சத்தைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: அரசு மருத்துவமனையை நாட அறிவுறுத்தல்

By ஜெ.ஞானசேகர்

தமிழகத்தில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் அச்சத்தைப் பயன்படுத்தி, சில தனியார் மருத்துவமனைகள்- மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் காய்ச்சல் நோயாளிகளிடம் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்தச்சூழலில், சில தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளை உள்நோயாளியாக சேர்த்து, பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல, சில ஆய்வகங்களும் மருத்துவப் பரிசோதனைக்காக மிக அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருச்சியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள்- மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் குறிப்பிட்ட தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தில் அண்மையில் திருச்சி மாநகராட்சி நகர் நல அலுவலர் நடத்திய ஆய்வு, அந்தப் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அந்த ஆய்வு தொடர்பாக மாநகராட்சி நகர் நல அலுவலர் சித்ரா கூறும்போது, “திருச்சி புத்தூர் பிரதான சாலையில் உள்ள அந்த தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தில் கடந்த 7-ம் தேதி ஆய்வு நடத்தியபோது, மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாதது தெரிய வந்தது. இதன்விளைவாகவே அங்கு ரத்தப் பரிசோதனை செய்த காய்ச்சல் நோயாளிகள் பலருக்கும் டெங்கு இருப்பதாக பரிசோதனை முடிவு வந்திருக்கலாம். இது, நோயாளிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல். மேலும், மருத்துவ பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன” என்றார்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா? முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? வரையறையின்றி அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பன போன்ற ஆய்வுகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் முறையாக மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தரமான சிகிச்சை...

இதுதொடர்பாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி- மருத்துவமனை முதல்வர் அனிதா கூறியது: தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை வீணாக செலவு செய்யத் தேவையில்லை.

அதேபோல, தனியார் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரை கடிதத்துடன் வந்து திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் உள்ள நுண் உயிரியல் துறை ஆய்வகத்தில் இலவசமாக செய்து கொள்ளலாம். முன்னதாக, அந்த பரிசோதனை தேவையா என்று ஆய்வு செய்யப்படும்” என்றார்.

ஆய்வு செய்வது யார்?

மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு செய்வது குறித்து மருத்துவப் பணிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது:

மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களில் ரத்தப் பிரிவு, நோய்க் குறியியல், உயிர் வேதியியல், நுண் உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களில் எந்தத் துறை அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு அதிகாரிகளிடம் இல்லை” என்றனர்.

ஆய்வகம் மீது நடவடிக்கை

சர்ச்சைக்குள்ளான தனியார் மருத்துவ ஆய்வகம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் கேட்டபோது, “புகார் எழுந்துள்ள ஆய்வகத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பதற்காக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், துணை இயக்குநர், நகர் நல அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி, அந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை மூடுவதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

அதேபோல, காய்ச்சல் நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்