தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பெற வேண்டிய ஓய்வு கால பணப் பலன்களை பெறுவதில் உள்ள பிரச்சினைகளைப் போக்க மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் ‘பென்ஷன் அதாலத்’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் (2017 செப்டம்பர் வரை) மட்டும் இதில் 421 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு மொத்தம் ரூ.7.52 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் ஏ.நசீர் அகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழக அரசு துறை ஓய்வூதியர்கள் தங்கள் பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் உள்ள உதவி மையத்தில் அனைத்து வார வேலை நாட்களிலும் மனு அளிக்கலாம்.
தபால் மூலமும் பிரச்சினை குறித்து தெரிவிக்கலாம். அவ்வாறு மனு அளித்த பின்னர், மனுதாரரிடம் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின்னர், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெறும் கவுன்சிலிங்குக்கு மனுதாரர், எதிர் மனுதாரர் (சம்பந்தப்பட்ட அரசு துறை) ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும். கவுன்சிலிங்கின்போது இருதரப்புக்கும் சுமூக உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அந்த மனு முடித்து வைக்கப்பட்டு தீர்வுத் தொகை பெற்றுத் தரப்படும்.
உடனடியாக தீர்வுத் தொகை
ஒருவேளை உடன்பாடு எட்டப்படவில்லையெனில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான ஹூலுவாடி ஜி ரமேஷ் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறும் பென்ஷன் அதாலத்துக்கு அந்த வழக்கு பரிந்துரை செய்யப்படும்.
அந்த வழக்கை ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஒரு மூத்த வழக்கறிஞர் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும். அவ்வாறு தீர்ப்பளித்த பின்னர், மனுதாரர்களுக்கு தீர்வுத்தொகை உடனே கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநில கணக்கு தணிக்கை துறை அலுவலகம், ஓய்வூதியத் துறை இயக்குநர் அலுவலகங்களிலிருந்து தலா ஒரு அதிகாரி ஒவ்வொரு விசாரணையின்போதும் ஆஜராகி இருப்பார். இதன்மூலம், தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன் உடனடியாக தீர்வுத் தொகை மனுதாரர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
கவுன்சிலிங் நிலையிலேயே தீர்வு
கடந்த 5 ஆண்டுகளில் ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக 2,481 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பல மனுக் களுக்கு கவுன்சிலிங் நிலையிலேயே தீர்வு காணப்பட்டுள்ளது. அதுபோக, பென்ஷன் அதாலத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளில் 421 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு...
பென்ஷன் அதாலத்துக்காக மனு தாக்கல் செய்வோர் வேறு எந்த நீதிமன்றத்திலும் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்க கூடாது. அதேபோல, வழக்கு நிலுவை யில் இருக்கவோ, தள்ளுபடி செய்யப்பட்டிருக்கவோ கூடாது. அதாலத்துக்கான செலவுகள் அனைத்தையும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவே ஏற்றுக்கொள்கிறது. ஓய்வூதியர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
எனவே, ஓய்வூதியர்கள் தங்கள் பிரச்சினை தொடர்பாக மனு தாக்கல் செய்ய விரும்பினால் 18004252441, 1516 ஆகிய இலவச தொலைபேசி எண்களிலோ அல்லது 044-25342441, 044-25343363 என்ற தொலைபேசி எண்களிலோ அலுவலக வேலை நேரத்தில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago