புதுச்சேரி டிஜிபி டெல்லிக்கு பணியிட மாற்றம்: புதிய டிஜிபியாக சீனிவாசன் நியமனம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிவரும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுச்சேரி டிஜிபியாக இருந்த மனோஜ் குமார் லால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. இவர் விரைவில் பணிஓய்வு பெறவுள்ள சூழலில் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக இவர் பொறுப்பேற்றிருந்தார்.

சரியாக ஓராண்டு நிறைவடையவுள்ள சூழலில் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதுச்சேரி ஏடிஜிபி ஆனந்த் மோகன், பதவி உயர்வு பெற்று அருணாசல் பிரதேசம் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் புதுச்சேரியில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி குமார் அந்தமானுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரிஷிதா குப்தா டெல்லிக்கும், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதிக்சா, விஷ்ணுகுமார் ஆகியோர் டெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில்தான் புதுச்சேரி ஐஜி ஓய்வு பெற்றார். இச்சூழலில் டிஜிபி, ஏடிஜிபி மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அதிகாரிகள் வருகை: அருணாச்சல் பிரதேசத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் ஜா புதுச்சேரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராஜ் டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் பங்கஜ் குமார் ஜா ஏற்கெனவே புதுச்சேரியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE