மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது தமிழகத்துக்கு பெரும் கேடு: வைகோ

By என்.சன்னாசி

மதுரை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது தமிழகத்துக்கு பெரும் கேடாக முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒடிசா ரயில் விபத்து ரயில்வே துறை வரலாற்றிலே மிகக் கொடூரமானது. இது தொழில்நுட்ப கோளாறா அல்லது சதி வேலையா என்பது பிரச்சினைக்கு உரியதாக்கப்பட்டுள்ளது. இதில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சதி வேலை எனில் செய்தவர்களுக்கு மன்னிப்பே கூடாது.

ரயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்ற பயத்தை மக்களுக்கு உண்டாக்கி இருக்கிறது. இச்சூழலில் ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும். இற்கான காரணகர்த்தாவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ரயில் விபத்து மீட்பு பணியில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி வைத்து தேவையான காரியங்களை செய்தது பாராட்டுக்குரியது.

சுமார் 12 ஆண்டுக்கு முன்பே ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். அப்போது மேகதாது அணை கட்டியே தீருவோம் என சொன்னார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கும். இது தமிழகததுக்கு பெரும் கேடாக முடியும்.

கபினி கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேரவில்லை எனில், தமிழகம் பஞ்சப் பிரதேசமாக்கப்படும். தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்யும் என்பது எனது குற்றச்சாட்டு” என்று வைகோ கூறினார். முன்னதாக, விமான நிலையத்தில் மாவட்ட செயலர் முனியசாமி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் வைகோவை வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE