இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் அடக்கம் செய்ததை எதிர்த்த வழக்கு: முழு அமர்வுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருக்கும்போது, மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது குறித்த வழக்கை, முழு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ளது. இந்நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். எனவே, புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்தில் புதைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலை தோண்டியெடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மயானமாக அறிவிக்கப்படாத இடங்களில் சடலங்களைப் புதைக்க, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை" என்றும் வாதிடப்பட்டது. அப்போது பாபு நாயுடு தரப்பில், "மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை புதைக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருக்கும்போது, கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE