“தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு...” - தொழில் 4.0 தொழில்நுட்ப மைய திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தின் இளைய சக்தியை உலக நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தொழில் 4.0 தொழில்நுட்ப மைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அப்போது முதல்வர் பேசியது: "அண்மையில் வெளியிடப்பட்ட தொழில் துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழகம்தான் முன்னணியில் இருக்கிறது.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு,வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறைகள், மின்னணு வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழகம் அபரிவிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

தமிழக அரசின் Guidance Tamil Nadu அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.2021 – 2022 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும்; உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது.

நம்முடைய அரசு பொறுப்பேற்றதுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023ம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது.இப்படி புதிய புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், புதியதாக தொழில்கள் தொடங்கப்படுகின்றன என்றால் என்ன பொருள்? தமிழகத்தில் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது என்று பொருள். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழகத்தில் இருக்கிறது என்று பொருள். தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் அமைந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம்.

மாநிலத்தின் முதன்மை திறன் மேம்பாட்டுத் திட்டமான - “நான் முதல்வன்”, திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்காலப் பணியாளர் தேவை வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழக அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. இது தமிழக தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

இந்த மையங்களில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடையப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இந்த சிறப்புமிக்க நிகழ்வு இந்த அரசின் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மட்டுமல்லாமல் இதர பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடைய வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை தமிழக மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி, வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு உளமாற வாழ்த்துகிறேன்.

எல்லார்க்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்களை, இளைஞர்களை உருவாக்க வேண்டும். தமிழகத்தின் இளைய சக்தியை உலக நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி வருகிறோம். அனைவருக்கும் திறமை வளர்ப்பதற்கான ஒரே மாதிரியான வாய்ப்பை தமிழக அரசு வழங்கும். எங்களது எண்ணத்திற்கு வலுசேர்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்