அமித் ஷா 11-ம் தேதி வேலூர் வருகை - சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா,வரும் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, பள்ளிக்கரணையில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், வேலூரில் நடைபெறும் பாஜகசாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித் ஷா, விமான நிலையத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்கிறார். அங்கு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியை கைப்பற்ற முக்கிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வழங்குவார் எனத் தெரிகிறது.

இந்நிகழ்வுக்குப் பிறகு காரில் சென்னை விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.

பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் தமிழக பாஜக நிர்வாகிகள், சென்னையில் நடைபெறும் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது, தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த தகவலை அமித் ஷாவிடம் வழங்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE