“ஒன்றிணைந்த செயல்பாடு” - வைத்திலிங்கம் இல்ல விழாவில் தினகரன், ஓபிஎஸ் பேச்சு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: "தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என்று தஞ்சாவூரில் நடந்த அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், “நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும்” என்றார்.

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா இன்று (ஜூன் 7) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கலந்து கொண்டனர். அப்போது, டிடிவி தினகரன் பேசியது: “அமமுக சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் சுயநலப்போக்கால், ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால், ஜெயலலிதாவின் இயக்கத்தை விட்டு கனத்த இதயத்தோடு நாங்கள் பிரிந்து, அமமுகவைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.

6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேடையில் அதிமுக - அமமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வைத்திலிங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் தொண்டர்களாக, நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம், இன்றைக்கு ஒரு சிலரின் சுயநலத்தால், பணத்திமிரால், பேராசையால் பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.எங்களுக்குள் இருந்த கஷ்டங்களையும், வருத்தங்களையும் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியையும், லட்சியங்களையும் நிறைவேற்றும் வகையில், நானும், நண்பர் பன்னீர்செல்வமும் கைகோர்த்திருக்கிறோம்.

எங்களுக்குள் இருந்த நட்பு உங்களுக்குத் தெரியும். விதி வசத்தால், காலத்தின் கட்டாயத்தால் நாங்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், எங்களுக்குள் இருக்கின்ற அன்பும், நட்பும் தொடர்ந்து வந்தது. அதனால்தான் பிரச்சினைகள் இல்லாமல் விட்டுக்கொடுத்து, இணைந்து பணியாற்றி, ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு அமமுக-அதிமுக இணைந்துள்ளது. எனவே, இயற்கையாக இணைந்த இந்த இணைப்பால் துரோகிகளுக்குப் பாடம் புகட்டி, தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று பேசினார்.

முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியது, “எம்ஜிஆருக்கு பிடித்த 7-ம் தேதி இன்று. ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும், இங்கு நாமெல்லாம் ஒன்றாக கூடியிருக்கின்றோம் என்றால், வைத்திலிங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தூய தொண்டர்களின் ஆழமான எண்ணங்களிலே, நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஆசைதான் உள்ளது. இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலையில், இந்த இயக்கத்துக்கு ஊறு விளைவித்து, அதை தங்களுக்கு சாதகமான சூழலாக பல எதிர்க்கட்சிகள் மாற்றி வருகின்றன. ஆனாலும், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும்.

அனைவருக்கும் நிறைவானதாக இருக்க வேண்டும் என்றுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார்கள். ஆனால் இன்றைக்கு மாறுபட்டிருக்கிறது. மீண்டும் அந்தச் சூழ்நிலை வருமோ? வராதோ? என்று பொது மக்கள் கவலையில் உள்ளனர். நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் நீங்கள் இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என சொல்கிறார்கள். எனவே, நாம் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்க வேண்டும். அதற்கான பிள்ளையார் சூழி இங்கு போடப்பட்டிருக்கிறது.

எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தஞ்சாவூரிலிருந்து தொடங்கினால், அது வெற்றி அடையும் என்ற நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அரசியல் களத்தில் விளையாடுகிறபோது, நம்மை எதிர்த்து விளையாடுகிற தகுதி தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே யாருக்கும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல், ஜெயலலிதா 234 சட்டமன்ற தொகுதியில் நமது இயக்கத்தில் உள்ளவர்களை தனித்து நிறுத்திப் போட்டியிட்டு வெற்றி பெற்றது போல, நாமும் அந்த நிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும். எனவே, ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்