கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்கள் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு: தகுந்த இழப்பீடு வழங்க அண்ணாமலை வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு எடுக்கப்படும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்," கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து, 150 நாட்களாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக தொழிற்துறை அமைச்சர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவித்ததில் இருந்தே, விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுக்காததால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாகவும், அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி அன்னையா உயிரிழந்திருக்கிறார் என்பதும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

150 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளை, தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் பின்னால் ஒளிந்து கொண்டு, போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு.

உடனடியாக, அமைச்சர் நேரில் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE