ரூ.1.31 கோடி ஊழல் குற்றச்சாட்டு | பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீதான ரூ.1.31 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை அறிவியல் நகரின் துணை தலைவராக பணிபுரிந்து வருபவர் மலர்விழி ஐஏஎஸ் இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியராக 2018-20-ல் பணியாற்றினார். அப்போது 251 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேவையான சொத்துவரி ரசீது புத்தகங்கள், குடிநீர் கட்டண ரசீது புத்தகங்கள், தொழில்வரி ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண ரசீது புத்தகங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடிப்பதற்கு, விதிமுறைகளுக்கு மாறாக 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, மலர்விழி, புகாருக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர்கள் தாகீர் உசேன், வீரய்யா பழனிவேலு ஆகியோர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள மலர்விழியின் வீடு, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேலு ஆகியோரின் சென்னை வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் உள்ள தாகீர் உசேன், வெட்டன்விடுதி அருகே கடுக்காக்காட்டில் உள்ள வீரய்யா பழனிவேலு வீடுகள் உள்ளிட்ட 3 இடங்கள், சென்னையில் 5 இடங்கள், விழுப்புரம், தருமபுரியில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE