கோவை | உயிரைப் பறிக்கும் விளம்பர பலகைகள்

By டி.ஜி.ரகுபதி 


கோவையில் பொது இடங்களில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக தமிழக அரசும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்திய சாலை பாதுகாப்பு விதிகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைக்க காவல்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, ஆட்சியரின் அனுமதியை பெற்று, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

ஊராட்சிப் பகுதிகளில், விளம்பரப் பலகைகள் வைக்க ஆட்சியருக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். தற்போது, தமிழக அரசு கொண்டு வந்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023-ன்படி, விளம்பரப் பலகைகள் வைக்கஅந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வைப்புத்தொகை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதியும் பெறாமல், உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களை மீறும் வகையிலும், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் வகையிலும் கோவையின் பல்வேறு இடங்களில், விளம்பரப் பலகைகள் தாறுமாறாக வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாநகரை ஒட்டிய புறநகரப் பகுதிகளில், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ராட்சதவிளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் தரப்பிலும் சுணக்கம் காட்டப்படுகிறது.

முறையான கண்காணிப்பு இல்லாதது, விதிகளை மீறி அமைப்பது, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

கோவை கருமத்தம்பட்டியில், சமீபத்தில் அனுமதியில்லாமல் ராட்சத இரும்பு சாரத்தில் விளம்பர பேனர் பொருத்தும் போது விபத்து நிகழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும், அதை வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, சமூக செயல் பாட்டாளர் தியாகராஜன் கூறும்போது, ‘‘கோவையின் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்திய சாலைகள் பாதுகாப்பு விதிகளை மீறி விளம்பர பேனர் வைக்கின்றனர். அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் விளம்பரப் பலகைகளை வைத்து வருகின்றனர். அனுமதி பெற்ற எண்ணை, விளம்பரப் பலகையில் அச்சடித்து இருக்க வேண்டும்.

சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான்விளம்பரப் பலகைகள் வைக்கவேண்டும்.ஆனால், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.அனுமதியின்றி வைக்கும் விளம்பரப் பலகைகள் காற்றின் வேகத்துக்கு கீழே சாய்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அது தவிர, விளம்பரப் பலகைகளை பிரமாண்ட சாரங்களில் பொருத்தும் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

தொடர்புடைய உள்ளாட்சி அதிகாரிகள் இதுபோன்று அனுமதி பெறாமல் வைக்கின்ற விளம்பர நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம்.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க விளம்பரப் பலகைகள் பொருத்தும் விவகாரத்தில் நடக்கும் விதிமீறல்கள் மீது மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும்போது,‘‘அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டால் அவை அகற்றப்பட்டு வருகின்றன. பதாகை மட்டுமின்றி அதற்கான சாரத்தையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுவரை 85-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர், வருவாய்த்துறையினர், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மூலம் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று அனுமதியற்ற விளம்பரப்பலகைகள் குறித்து தெரியவந்தால் அவை உடனடியாக அகற்றப்படுகின்றன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்