நிலத்தடி நீரை பயன்படுத்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் தடையில்லா சான்று (என்ஓசி) பெற்றால்தான் குடிநீர் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும் என மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் நிலத்தடி நீரைத்தான் முக்கிய நீர் ஆதாரமாகக் கொண்டுள்ளன.
எனவே, நிலத்தடி நீர் மட்டம் மிகவும் அபாயகரமாக உள்ள பகுதிகளில் வர்த்தக ரீதியில் அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுவதை தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், “தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில், நிலத்தடி நீரை உறிஞ்சி பயன் படுத்தும் நிறுவனங்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்காக மாநில அரசின் உரிய துறையிடம் (பொதுப்பணித்துறை) விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பித்து பெற்ற சான்றின் நகலை, புதிதாக உரிமம் பெற விண்ணப்பிக்கும்போதும், உரிமத்தை புதுப்பிக்கும்போதும் உணவு பாதுகாப்புத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சான்று அளிக்காத நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கவோ, புதுப்பிக்கவோ கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “எஃப்எஸ்எஸ்ஏஐ அனுப்பியுள்ள கடிதத்தை அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம். கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும்போது அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோவை டி.சுரேஷ்குமார் கூறும்போது, “கேன் குடிநீர் நிறுவனங்களை இயக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற சில விதிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, மாநில பொதுப்பணித் துறையிடம் நிலத்தடி நீரை பயன்படுத்த தடையில்லா சான்று (என்ஓசி) பெறுவதாகும்.
4 வகை பகுதிகள்
நிலத்தடி நீர் மட்டத்தை பொறுத்து மிகவும் அபாய கட்டத்தில் உள்ள பகுதி, அபாய கட்டத்தில் உள்ள பகுதி, மித அபாயம், பாதுகாப்பான பகுதி என 4 வகையாக பொதுப்பணித் துறை பிரித்துள்ளது.
இதில், குடிநீர் நிறுவனம் அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானது அல்லது மித அபாயகரமான பகுதியாக இருந்தால் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், நிலத்தடி நீர் மித அபாய கட்டத்தில் உள்ள இடங்களில் ஏற்கெனவே தடையில்லா சான்று பெற்று குடிநீர் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கிய சில ஆண்டுகளில் அந்த பகுதி அபாகரமானதாக மாறிவிடுகிறது.
மத்திய அரசிடம்
எனவே, எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவுப்படி மீண்டும் நாங்கள் தடையில்லா சான்று பெறும்போது சிக்கல் ஏற்படும். அதற்காக ஒவ்வொரு முறையும் நாங்கள் குடிநீர் நிறுவனம் அமைந்துள்ள இடத்தை மாற்ற முடியாது. மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, யாரும் பாதிக்காத வகையில் தீர்வை ஏற்படுத்து மாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.
குறையும் நிலத்தடி நீர்மட்டம்
குடிநீருக்காக மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகளுக்காக நிலத்தடி நீரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பரவலாக மழை பெய்திருந்தாலும் பொதுப்பணித் துறை அளித்துள்ள தகவலின்படி திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட்டில் இருந்த அளவை விட செப்டம்பரில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago