விருதுநகர் | வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு

By இ.மணிகண்டன்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் இன்று தங்க அணிகலன் மற்றும் தங்க தகடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம், வைப்பார் ஆற்றின் வடக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப் பகுதி தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அகழாய்வில் இதுவரை 3,254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்பொருட்களான கண்ணாடி, மணிகள், அறிய வகை கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக் காய்கள், பகடைக்காய், தக்களிகள், மணிகள், காதணிகள், சக்கரங்கள், எடைக் கற்கள், முத்திரைகள், திமிலுள்ள காளைகள், சுடுமண் உருவங்கள், சுடுமண்பதக்கங்கள் வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள்,

சங்கு மணிகள், செப்புக் காசுகள், இரும்புப் பொருட்கள், தங்க அணிகலன், கற்கோடாரி, செப்புப் பொருட்கள், கண்ணாடி வளையல்கள், கல் பந்துகள், சுடுமண் பந்துகள், அரவைக்கல், மெருகுக்கல், சுடுமண் அச்சுக்கள், சுடுமண் புகைப்பான்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள்
மற்றும் தந்தத்தினாலான பதக்கங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

தற்போது நடைபெற்று வரும் 2ம் கட்ட அகல ஆய்வு பணியின் போதும் சங்கு வளையல்கள் சுடுமண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இன்று தங்கத்தினால் ஆன தோடு மற்றும் தங்க தகடு தலா 2 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தங்க தகடு மற்றும் தங்கத் தோடு கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான திரண்டு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE