அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் - மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது; கம்பத்தில் 144 தடை வாபஸ்

By செய்திப்பிரிவு

உத்தமபாளையம்/திருநெல்வேலி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுற்றித் திரிந்த அரிசிக் கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்பு களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் யானையை விடுவித்தனர். யானை பிடிபட்டதால் கம்பம் நகரில் அமலில் இருந்த 144 தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப் பகுதியில் நடமாடிய அரிசிக் கொம்பன் எனும் காட்டு யானையை அம்மாநில வனத்துறையினர் கடந்த ஏப்.29-ல் மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி வனப்பகுதியில் விட்டனர். அதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

இந்த யானை கண்ணகி கோயில் வழியே மேகமலை வனப்பகுதிக்குள் அடுத்தடுத்து நுழைந்தது. கடந்த மே 27-ம் தேதி கம்பம் நகருக்குள் யானை புகுந்தது. இதனைப் பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு கருதி இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கம்பம் வாழைத்தோப்பில் இருந்த இந்த யானை மே 28-ல் மேகமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. யானை மீண்டும் நகருக்குள் வந்துவிடாமல் தடுக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாக சண்முகாநதி அணை நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த யானை இடம்மாறிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை எரசக்கநாயக்கனூர் அருகே பெருமாள்கோயில் எனும் பகுதிக்கு யானை வந்தது. அப்போது, கால்நடை மருத்துவர்கள் அரிசிக் கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக் கொம்பனை லாரியில் ஏற்றினர்.

பின்னர், கம்பம் புறவழிச் சாலை வழியாக திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனப் பகுதிக்கு அரிசிக் கொம்பனை கொண்டு சென்றனர். லாரியின் முன்பும், பின்பும் வனத் துறை வாகனங்கள் பாதுகாப்புக்காக சென்றன. வழிநெடுகிலும் யானையை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மயக்க நிலையிலேயே லாரியில் ஏற்றி வரப்பட்ட அரிசிக் கொம்பன் யானை, தகிக்கும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க வழியில் கோவில்பட்டி, தாழையூத்து, சேரன்மகாதேவி என பல்வேறு இடங்களிலும் லாரியை நிறுத்தி, யானை மீது தீயணைப்பு துறையினர் தண்ணீரை தெளித்து அதை குளிர்வித்தனர்.

கம்பத்திலிருந்து திருநெல்வேலிக்கு கிட்டத்தட்ட 250 கி.மீ. தூரம் லாரியில் அழைத்து வரப்பட்ட அரிசி கொம்பன், மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாறு சோதனைச் சாவடியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் விடப்பட்டால், பரப்பளவு அதிகம் கொண்ட இந்த வனப்பகுதியில்இருந்து அது மனித குடியிருப்பு பகுதிக்குள் வருவது கடின என்று வனத்துறை கருதுகிறது.

மக்கள் எதிர்ப்பு: ஆனால் வாழ்விட மாற்றத்தால், சூழலியல் தகவமைப்பு ஒவ்வாமை காரணமாக, வனத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகும் வழக்கம் கொண்ட இந்த யானை, பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரிசிக்கொம்பன் யானையை மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு சோதனை சாவடியில் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் சோதனைச் சாவடியில் காணி பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்