அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: நகராட்சி ஆகியும் நகராமல் ‘நின்ற ஊர்’

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் ஒன்று திருநின்றவூர். தலைநகர் சென்னையின் புறநகர் பகுதியாக விளங்கும் இந்த நகராட்சியை, பேரூராட்சி நிலையில் இருந்து தரம் உயர்த்தி தமிழக அரசு கடந்த 2021 அக்.16-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

‘‘நகராட்சியாக மாற்றப்பட்டதால் நாங்கள் அடைந்த ஒரே பயன் சொத்துவரி உயர்த்தப்பட்டது மட்டுமே. மற்றபடி, நகராட்சிக்கு உரிய எந்த அடிப்படை வசதியும் இங்கு முழுமையாக நிறைவேற்றப் படவில்லை’’ என்கின்றனர் திருநின்றவூர் நகராட்சி மக்கள், சமூக ஆர்வலர்கள்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது: 11 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டஇந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், லட்சுமிபுரம், தாசர்புரம், அந்தோணி நகர், வத்சலாபுரம், அன்னை இந்திரா நகர், பாபுஜி நகர், திருவேங்கடநகர், சுதேசி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படவில்லை. இதனால், சிறு மழை பெய்தாலே, சேறு சகதியில்தான் மக்கள் செல்லவேண்டி உள்ளது.

சாலை போடப்படாமல் மண் தெருவாக காணப்படும் திருநின்றவூர்
அன்னை இந்திரா நகர் பகுதி.

பேரூராட்சியாக இருக்கும்போதே பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு, என்ன காரணத்தாலோ கைவிடப்பட்டது. இப்போதுநகராட்சியாக மாறி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், பாதாள சாக்கடை அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், வீடுகள், வணிக வளாகங்களில் சேரும் கழிவுநீரை எடுக்க தனியார் லாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் தரவேண்டி உள்ளது.

இதனால் தெருக்கள், சாலைகளிலேயே கழிவுநீரை சிலர் விடுகின்றனர். இதன் காரணமாக, பெரிய காலனி, திருவிக நகர்,சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரம் பெரிதும் சீர்கெட்டுள்ளது. திருநின்றவூரை ஒட்டியுள்ள நடுக்குத் தகை, பாக்கம் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ரயில்கள், பேருந்துகள் மூலம் செல்லவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் தினமும் திருநின்றவூர் சிடிஎச் சாலை பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் கிடையாது. அந்த சாலையில் பொது கழிவறை இல்லை. காய்கறி, மீன் மார்க்கெட் கிடையாது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து கேட்டபோது, நகராட்சிஆணையர் மா.புகேந்திரி கூறியதாவது: கலைஞர் நகர்ப்புற மேம்பாடு, நமக்கு நாமே, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியின் கீழ்,முன்னுரிமை அடிப்படையில், சாலைகள், மறுசுழற்சி மையம், பசுமை உரக்குடில், ஒரு பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவை அமைக்க நகராட்சி பகுதியில் போதிய இடம் இல்லை. நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு கிடையாது. குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சேரும் கழிவுநீரை எளிதாக அகற்ற ஏதுவாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

குறைகள், கோரிக்கைகள்

# கடந்த 2012-ல் அப்போதைய ஆவடி எம்எல்ஏ அப்துல்ரஹீம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.20 லட்சத்தில் கன்னிகாபுரத்தில் அமைத்துக் கொடுத்த ஆடு தொட்டி சிதிலமடைகிறது.
# நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணி யிடங்கள் காலியாக உள்ளன.
# பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாததால், மழை காலங்களில் திருநின்ற
வூரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் மிதக்கின்றன.
# பல பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடக்கிறது.
# அன்னை இந்திரா நகர் பகுதி சமுதாய நலக்கூடம் மோசமான நிலையில் உள்ளது.
# நகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 10 மயானங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.
# பக்தவத்சல பெருமாள், இருதயாலீஸ்வரர், ஏரி காத்த ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.

- இரா.நாகராஜன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்