திருச்சி கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் முன், அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்து கேட்ட பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.
திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதனிடையே, 2006- 2011 திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திருச்சி- மதுரை சாலையில் பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஜெயலலிதா முதல்வரானதும் இந்தத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆனால், எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதன் காரணமாக விழாக் காலங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்களை உருவாக்கி மாவட்ட நிர்வாகம் சமாளித்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த 26-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது, “திருச்சி கொட்டப்பட்டில்(மத்திய சிறை வளாகத்தின் பின்புறம்) ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீடு கூர்ந்தாய்வு செய்து, திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.
இதன்மூலம் திருச்சி மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறவுள்ள அதே சமயத்தில், கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்தால், மாநகரில் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தவே செய்யும் என்றும், பணியைத் தொடங்கும் முன் திட்டம் குறித்து மக்களுக்கு முழுமையாக விளக்கி, அனைத்துத் தரப்பு மக்களிடம் திட்டம் குறித்து கருத்துக் கேட்டு, மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி யுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் கூறும்போது, “கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் அரசின் முடிவால், மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே உள்ள சாலைகள், சாக்கடை, குடிநீர் குழாய்கள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் நிதி விரயம் ஏற்படும். அதேவேளையில், புதிய இடத்தில் திட்டத்தைச் செயல்படுத்தினால் செலவும் குறையும், பணியையும் எளிதாக நிறைவேற்ற முடியும்.
குறிப்பாக, மாநகரின் வளர்ச்சி என்பது குடியிருப்புகள் உருவாகுவதில் மட்டும் இல்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்களை பரந்து செயல்படுத்தப்படுவதிலும் அடங்கியுள்ளது. எனவே, இது தொடர்பாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்டு, மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயல்படுத்த வேண்டும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா கூறும்போது, “ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், மாநகரில் ஏற்கெனவே வாகன நெரிசல் உள்ள நிலையில், கொட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவுள்ளதாக அறிவித்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருத முடிகிறது. எனவே, மாநகருக்குள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்கும் முன் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்றார்.
நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.சேகரன் கூறும்போது, “கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு அங்கு இடம் மாற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
எனவே, ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான இடத்தையும், திட்ட வரைவையும் இறுதி செய்வதற்கு முன் பொது நல அமைப்புகள், மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மக்களுக்குத் தேவையான நவீன வசதிகளை அங்கு நிறைவேற்ற முடியுமா? என்பது உள்ளிட்ட அனைத்து சாதக பாதகங்களையும் ஆய்வு செய்து உலகத் தரத்தில் கட்ட வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago