மானாமதுரை அருகே அதிகாரிகளை நம்பி குடியிருந்த வீடுகளை இழந்து தவிக்கும் 52 இலங்கைத் தமிழர்களின் குடும்பங்கள்

By இ.ஜெகநாதன்


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதிய வீடுகள் கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறியதை நம்பி, குடியிருந்த வீட்டுகளை இடித்துவிட்டு 52 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வீடின்றி தவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊருணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் உள்ள முகாம்களில் 1,609 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வசிக்கும் பழைய வீடுகளை இடித்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி முகாமில் 186 குடும்பங்கள் உள்ளநிலையில், முதற்கட்டமாக 52 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு, புதிய வீடுகள் கட்டி கொடுக்க ஏதுவாக, பழைய வீடுகளில் உள்ள 52 குடும்பங்களையும் வெளியேறுமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த வீடுகளை அவரவர் இடித்துவிட வேண்டுமெனவும் தெரிவித்தனர். இதை நம்பி கடந்த ஏப்ரலில் 52 குடும்பங்களும் வீட்டை காலி செய்ததோடு, அவற்றை இடித்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆங்காங்கே வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய வீடு கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் கூட தொடங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இலங்கை தமிழர்கள், அதிகாரிகளிடம் விசாரித்த போது, புதிய வீடுகள் கட்டுவதற்கு இதுவரை ஒப்பந்தம் கூட விடவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அதிகாரிகளை நம்பி வீடுகளை இடித்துவிட்டு, தற்போது வீடின்றி தவிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு கொடுத்தனர். அவர்களிடம் விரைவில் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் இடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வீடுகள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழர்கள் சிலர் கூறும்போது, ''வீடு கட்ட ஒப்பந்தம் கூட விடாமல், பழைய வீட்டை இடிக்க சொல்லிவிட்டனர். இதை நம்பி நாங்கள் ரூ.30,000 வரை கடன் வாங்கி, பழைய வீட்டை இடித்துவிட்டோம். தற்போது மாதம் ரூ.5,000 கொடுத்து வாடகை வீட்டில் வசிக்கிறோம். நாங்கள் கூலி வேலை செய்வதால், எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. மேலும் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளை நம்பி நாங்கள் வீடின்றி தவித்து வருகிறோம்'' என்று கூறினர்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''வீடு கட்டும்போது காலி செய்தால் போதும் என்று கூறினோம். ஆனால் அவர்கள் முன்னதாகவே காலி செய்துவிட்டனர். மேலும் பழைய வீடுகளை ஒப்பந்ததாரர்கள்தான் இடிக்க வேண்டும். ஏன் வீட்டை இடித்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை'' என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE