மதுரவாயல் ஏரிக்கரையில் நிழற்குடை அமைக்கப்படுமா? - உங்கள் குரலில் வாசகர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று ‘உங்கள் குரல்’ சேவை வழியாக வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ‘உங்கள் குரல்' பிரத்யேக புகார் எண் சேவையை தொடர்பு கொண்டு, வாசகரும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியுமான எம்.ராஜா கூறியதாவது: சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம். காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், மாநகரப் பேருந்துகளும் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றன.

ஆனால், நிழற்குடை உட்பட பேருந்து நிறுத்தத்துக்கான எந்த வசதியும் இங்கு இல்லை. பெட்ரோல் பங்க் மற்றும் அருகே உள்ள கடைகளின் வாசல் என ஆங்காங்கே பயணிகள் நிற்பார்கள். பேருந்து வந்ததும் கூட்டமாக ஓடி வந்து ஏறுவார்கள். இதுபோன்ற நிலையால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், இந்த நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒரு மூதாட்டி வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

நிழற்குடை இருந்தால் இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கலாம். இதற்கு நேர் எதிரே உள்ள நிறுத்தத்தில்கூட இருக்கையுடன் கூடிய நிழற்குடை இருக்கிறது. அதுபோல, இந்த பக்கமும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க ஏற்கெனவே அனுமதி கோரியுள்ளோம். தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அங்கு மேம்பாலப் பணிகள் நடப்பதால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. மேம்பாலப் பணிகள் முடிந்த பிறகு, நிழற்குடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தற்காலிக ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE