Odisha Train Accident | உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE