ஒரு வழிப்பாதையானது திருச்சி ஜங்ஷன் புதிய மேம்பாலம்: முறையான அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

By ஜி.செல்லமுத்து

திருச்சி: திருச்சி ஜங்ஷன் புதிய மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதி பயன்பாட்டுக்கு வரும் முன், கருமண்டபம், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பகுதியை இருவழிப்பாதையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை சாலையை இணைக்கும் வகையில் மன்னார்புரம் செல்லும் பகுதி கடந்த மே 29-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது இந்தப் பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார்புரம், கிராப்பட்டி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், ஜங்ஷன் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். அதேவேளையில், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், ஜங்ஷன் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறிச் செல்ல அனுமதி இல்லை. அதேபோல, கிராப்பட்டி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி, வலதுபுறம் அதாவது மன்னார்புரம் பகுதிக்குச் செல்லவும், மன்னார்புரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி, இடதுபுறம் அதாவது கிராப்பட்டி பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மேம்பாலத்தின் அனைத்து வழித்தடங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், இரும்புத் தடுப்புகளை அமைத்து, விதிமுறைகளை மீறி வரும் வாகனங்களை திருப்பி விடுகின்றனர். அதையும் மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. ஜங்ஷன் புதிய மேம்பாலம் முன்னறிவிப்பின்றி ஒரு வழிப்பாதையாக மாற்றிய மைக்கப்பட்டுள்ளதால் அவதியடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராப்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் கூறியது: ஜங்ஷன் புதிய மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து கிராப்பட்டி வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் கீழ் பகுதி, ஜங்ஷன் பழைய பாலம் வழியாக பி அண்டு டி காலனி வரை சென்று ‘யு’ டர்ன் செய்து, 1 கி.மீ-க்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சிரமப்படாத அளவுக்கு புதிய மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஜங்ஷன் புதிய மேம்பாலத்தில் உள்ள வழித்தடங்களில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்களை இருவழித்தடமாக அனுமதித்தால், விபத்துகள் அதிகளவில் நேரிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதைத் தவிர்க்கும் விதமாக ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE