கிட்டசூராம்பாளையத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள்

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: கிட்டசூராம்பாளையம் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி கிட்டசூராம் பாளையம் எம்ஜிஆர் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நான்கு ஏக்கர் பரப்பளவில் 512 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி, கிட்டசூராம்பாளையம் சுற்றுப் பகுதிகளில் வீடு இல்லாத குடிசை வாழ் மக்களுக்காக கட்டப்படுகின்றன. அடுக்குமாடி கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தரைதளம் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் முழுமையடையாமல் அப்பகுதி புதர் மண்டி காணப் படுகிறது. கடந்த ஆண்டு அரசு துறை அலுவலகங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில், அடுக்குமாடி குடியிருப்பு பெற விரும்பும் பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ.60 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும். பயனாளி ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பொள்ளாச்சி நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப மாதவருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளிக்கு சொந்த வீடு, மனை இருக்கக் கூடாது. திருமணமானவராக இருக்க வேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டன.

குடியிருப்புகளை பெற விரும்பும் பயனாளிகள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், இரண்டு புகைப்படங்கள், ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட செயல்பாட்டு வாரிய கோவை கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கவேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இதுகுறித்து எந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை.

மேலும், பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரமும் தெரியவில்லை. கட்டுமானங்கள் முழுமையடையாத நிலையில் உள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “கரோனா கட்டுப்பாட்டு காலம், தொழிலாளர் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீடு தாமதம் ஆகிய காரணங்களால் கட்டுமான பணி தாமதமடைந்தது. ஆறு மாதங்களுக்குள் கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக பக்கவாட்டு சுவர்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE