80-வது பிறந்த நாள் | இளையராஜாவுடன் முதல்வர் சந்திப்பு: மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று 80-வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: இளையராஜா பிறந்தநாளில் அவருக்கு அன்பான வாழ்த்துகள். மேஸ்ட்ரோவின் மெல்லிசைகள் மொழி, கலாச்சாரத்தின் தடைகளை தாண்டி இதயங்களுடன் பேசுகின்றன, இதனால் மனிதகுல ஒற்றுமை நிரூபனமாகிறது. அவரது இன்னிசைகள் எப்போதும் சிறக்கட்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: இளையராஜாவின் ஆழ்ந்த பக்தியும் இசை மீதான அர்ப்பணிப்பும் லட்சக்கணக்கான இசை பிரியர்களின் இதயத்தை வென்றுள்ளது. அவர் இசைக்கு அளித்த பங்களிப்பு என்பது எப்போதும் நாட்டின் சொத்தாக இருக்கும். அவரது பண்புகள் எண்ணிலடங்கா அன்பானவர்களை அவரோடு இணைத்தது மட்டுமின்றி, இளையதலைமுறைக்கு அவரது குணம் ஒரு பாடமும் ஆகும். அவர் நல்ல உடல் நலத்துடன் இசை, தேசம் மற்றும் மனித நேயத்துக்கு சேவையாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: காலைப் பொழுது இனிதாய் மலர, பயணங்கள் இதமாய் அமைய, மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற, துன்பங்கள் தூசியாய் மறைய, இரவு இனிமையாய் சாய தமிழகத்தின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா. அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கி சொக்கிக் கிடக்கும் ரசிகனாக, உங்களில் ஒருவனாக, அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் ராஜாதான். வாழ்க நூறாண்டுகள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 80 வயதில் இமாலயச் சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, இசைத் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து, ‘பாரத ரத்னா’ விருதை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக இளையராஜா விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: திரையிசை சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா உள்ளிட்ட தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு முதல்வர் ஸ்டாலின், நேற்று நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை போர்த்தி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, `மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தை முதல்வர் வழங்கியதுடன், இளையராஜாவுடன் சிறிதுநேரம் உரையாடினார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE